“ஆச்சி மசாலாவுக்கு தடைவிதித்த கேரளா?”- அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம் வர்த்தகம்

பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடைவிதித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

AACHI 2.png

Facebook Link I Archived Link

நடிகர் சந்தானத்தின் திரைப்பட காட்சி ஒன்றை பகிர்ந்து, அதன் மேல் பகுதியில், “பூச்சி மருந்து அதிகம் கலப்பதாக ஆச்சி மசாலா தடை – செய்தி” என்று உள்ளது. கீழ் பகுதியில், “நாம மோசம் போயிட்டோம்டா. இம்புட்டு நாளா நாம தின்னது ஆச்சி மசலாலா இல்லையாம். பூச்சி மசாலாவாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, S Kingston என்பவர் 2019 செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆச்சி மசாலாவுக்கு கேரளா அரசு தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பல விதங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது. தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு இந்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தினகரன் இணையதளத்தில் இந்த செய்தியைத் தேடினோம். ஆனால், அந்த செய்தி இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது தெரிந்தது.

AACHI 3.png
AACHI 4.png

தினகரனில் வெளிவந்த செய்தியின் புகைப்படம் நமக்குக் கிடைத்தது. அதில், கேரள மாநிலம் திருச்சூரில் ஆச்சி மசாலா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினார்களாம். அப்போது, ஆச்சி மிளகாய் பொடியில் பூச்சி மருந்துகளான இட்டியோன், புரபேனோபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம். அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆச்சி மிளகாய்த் தூளுக்கு கேரள அரசின் உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

AACHI 5.png

Facebook Link I Archived Link

கேரளா அரசு தடை விதித்தது உண்மையா என்று கண்டறிய முயன்றோம். இது தொடர்பாக தேடியபோது மலையாளத்தில் வெளியான ஒரு செய்தி கிடைத்தது. அதில் கேரளாவில் தடை என்று குறிப்பிடவில்லை. திருச்சூர் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி தடை விதித்ததாக குறிப்பிட்டு இருந்தனர். அதாவது, திருச்சூர் உணவு வட்டாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

தொடர்ந்து தமிழில் தேடியபோது, புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், இணைய தளத்தில் பரவும் தகவல் வெறும் வதந்தி. இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆச்சி மசாலா நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும் சில ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. அந்த அறிக்கை கீழே…

AACHI 7.jpg

இது தொடர்பாக ஆச்சி மசாலா விளக்கம் அளித்துள்ளதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். ஆனால், எந்த விளக்கமும் இல்லை. அதன் நிறுவனர் A D Padmasingh Isaac ஃபேஸ்புக் பக்கத்தில் தேடியபோது, அவர் விளக்கம் அளித்திருப்பது தெரிந்தது. அதில், “கேரளாவில் ஆச்சி மிளகாய் பொடியில், சில மருந்துகள் கூடுதல் அளவில் இருந்ததாகக் கூறி, அவை உணவு பாதுகாப்பு முறையால் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தவறான செய்தி சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும், திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.

இது முற்றிலும் தவறான தகவல். ஆச்சி மசாலா நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும், தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், தமிழரின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் தயாரிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

Archived Link

நம்முடைய தேடலில், youturn.in என்ற இணையதளம் வெளியிட்டிருந்த உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று கிடைத்தது. அதில், கேரளாவில் உள்ள திருச்சூர் உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் ஜெயஶ்ரீயிடம் இது குறித்து விளக்கம் கேட்டதாக குறிப்பிட்டிருந்தனர். அப்போது அவர், ஜூன் 4ம் தேதி தயாரிக்கப்பட்ட ஆச்சி மிளகாயத் தூளை ஆய்வுக்கு அனுப்பினோம். அப்போது, ஒரு கிலோவுக்கு 0.01 மி.கி-க்கு கீழ் என்ற அளவுக்கு கீழ் பூச்சி மருந்து இருக்க வேண்டும். ஆனால், ஆச்சி மசாலாவில் இட்டியோன் ஒரு கிலோவுக்கு 3.77 மி.கி என்ற அளவிலும், புரபேனோபோஸ் 4.14 மி.கி என்ற அளவிலும் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பேட்ச் மிளகாய் தூளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு பேட்ச் தயாரிப்பை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அந்த முடிவு இன்னும் வரவில்லை” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டிருந்த அறிவிப்பையும் இணைத்திருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

AACHI 6.jpg

இது தொடர்பாக விளக்கம் பெற ஆச்சி மசாலாவை தொடர்புகொண்டோம். ஆனால் இது தொடர்பாக பேச யாரும் முன்வரவில்லை. 

நம்முடைய ஆய்வில்,

கேரளாவில் ஆச்சி மிளகாய்த் தூளுக்கு தடை என்பது உண்மை இல்லை.

திருச்சூர் பகுதியில் குறிப்பிட்ட ஒரே ஒரு பேட்ச் ஆச்சி மிளகாய்த் தூளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சூர் உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் கூறியது கிடைத்துள்ளது.

எந்த வித பரிசோதனைக்கும் தயார் என்று ஆச்சி நிறுவனர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கேரளாவில் ஆச்சி மிளகாய்த் தூளுக்குத் தடை என்ற தகவல் தவறானது என்பதும் கேரளாவின் குறிப்பிட்ட பகுதியில் அதுவும், ஜூன் 4ம் தேதி தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு பேட்ச் மிளகாய் தூளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதை மறைத்து ஒட்டுமொத்தமாக தடை என்று வதந்தி பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“ஆச்சி மசாலாவுக்கு தடைவிதித்த கேரளா?”- அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: Mixture

1 thought on ““ஆச்சி மசாலாவுக்கு தடைவிதித்த கேரளா?”- அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு

Comments are closed.