
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை காவி நிறமாக மாற்றப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காவி நிற ஜெர்ஸியில் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “காவி சீருடைக்கு மாறும் இந்திய அணி… அரசியல் நிர்பந்தமா? அனாவசிய மாற்றமா?” என்று உள்ளது.
இதன் கீழ், “தமிழ்நாட்ட நினைச்சாதான் பயமா இருக்கு. இந்த கலர பார்த்தாலே விரட்டுவாங்க… இதுல நம்ம கதி என்னாகபோகுதோ” என்று தோனியும் கோலியும் பேசுவது போல கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை மாற்ற அரசியல் நெருக்கடி காரணம் என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றுள்ளனர். 2019 ஜூன் 5ம் தேதி இந்த பதிவை Tamil Makkal என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி ஏராளமானோர் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கிரிக்கெட் அணிகளுக்கான ஜெர்ஸி தொடர்பான விதிமுறைகளை ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்தான் வெளியிடுகிறது. உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளுக்கு ஜெர்ஸி தொடர்பாக அது விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில், ஒரே நிறம் கொண்ட அணிகள், தங்கள் ஜெர்சியின் நிறத்தை சில போட்டிகளுக்கு மாற்ற வேண்டும் என்பது முக்கியமானது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
சொந்த நாட்டில் விளையாடும் அணி தன்னுடைய ஜெர்ஸியை மாற்ற வேண்டியது இல்லை. அதேபோல், தங்களுக்கான தனித்தன்மையான நிறம் கொண்ட அணிகள் தங்கள் ஜெர்ஸியை மாற்ற வேண்டியது இல்லை. ஒரே நிறத்தைப் பயன்படுத்தும் அணிகள் மட்டும் தங்கள் ஜெர்ஸியை ஒரு சில போட்டிகளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் வெவ்வேறான நீல நிறத்தை பயன்படுத்துகின்றன. வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை பச்சை நிற ஜெர்ஸியை பயன்படுத்துகின்றன.

அந்த வகையில் இந்தியா தன்னுடைய ஜெர்ஸியை சில போட்டிகளுக்கு மட்டும் மாற்றியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. வருகிற 2019 ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்திய அணி நீல நிற ஜெர்ஸியை பயன்படுத்துகிறது. அதில், இந்தியா என்ற பெயர் ஆரஞ்சு நிறத்தில் இடம் பெற்று இருக்கும். அதனால், புதிய ஜெர்ஸி ஆரஞ்சு நிறத்தில் நீல நிற பட்டை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாதிரி கூட வெளியாகின. ஆனால், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
நாம் மேற்கெண்ட ஆய்வில், ஐ.சி.சி விதிமுறை அடிப்படையிலேயே சில போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றப்பட உள்ளது. அது ஆரஞ்சு (காவி) நிறத்தில் இருக்கலாம் என்றும் அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது என்றும் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஐ.சி.சி விதிமுறைப்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அரசியலுடன் தொடர்புபடுத்தி விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை நிறம் மாற்றப்படுகிறது என்பது முற்றிலும் தவறான செய்தி என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காவி சீருடைக்கு மாறுகிறதா இந்திய கிரிக்கெட் அணி? – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Praveen KumarResult: False
