வைரல் ஆன கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிச்சை எடுக்கும் அழகான சிறுமி படம்! – உண்மை அறிவோம்

சமூக ஊடகம் | Social சமூகம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு அழகான சிறுமியை தமிழகத்தை சேர்ந்த பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க வைப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Child Trafficking 2.png

Facebook Link I Archived Link

அழகான சிறுமி பிச்சை எடுப்பது போன்ற இரண்டு படங்கள் ஒன்று சேர்த்து பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “கர்நாடகா மாநிலம் மங்களூரில் தமிழக பிச்சைக்காரர்களால் பிச்சை எடுக்க வைக்கப்படும் இந்த அழகான சிறுமி தனது பெற்றோர் வசம் செல்லும் வரை ஷேர் பண்ணுங்க…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தை யார் எடுத்தது, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இதில் நிலை. இந்த பதிவை, ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 16ம் தேதி பகிர்ந்துள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அழகான சிறுமி பிச்சை எடுக்கிறார்… அவர் கடத்தப்பட்ட பெண்ணாக இருக்கலாம். பெற்றோர் கண்டுபிடிக்கும் வரை இதை ஷேர் செய்யுங்கள் என்று கூறியிருப்பதால், இதன் நம்பகத்தன்மையை அறியாமல் சிறுமியின் படத்தைப் பார்த்து பரிதாபம் காரணமாக பலரும் இந்த படத்தைப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இந்த சிறுமியின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி போல இல்லை. கையில் உள்ள தட்டில் ரூபாய் நோட்டுக்களாக இருந்தன. அந்த பணத்தை பெரியதாக்கி பார்த்த போது  நோட்டில் காந்தி படத்துக்கு பதில் வேறு ஒருவர் படம் இருந்தது. இதன் மூலம் இந்த பணம் இந்திய ரூபாய் இல்லை என்று தெரிந்தது. அதனால், இந்த சிறுமி வேறு நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தோன்றியது. Jogar Aviator 1 win

Child Trafficking 3.png

சிறுமியின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, வங்க மொழியில் நிலைத் தகவல் அளிக்கப்பட்டு அதிக அளவில் இந்த சிறுமியின் படம் பகிரப்பட்டது தெரிந்தது. நிலைத் தகவலை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, அனைவரும் இந்த சிறுமி கடத்தப்பட்டவராக இருக்கலாம். பெற்றோரிடம் சென்று சேரும் வரையில் இந்த படத்தை பகிருங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Child Trafficking 4.png


இதனால், வங்கதேச டாக்கா நோட்டுக்களை ஆய்வு செய்தோம். அப்போது, சிறுமியின் தட்டில் இருந்த பணத்திலிருந்த படமும், வங்க தேச டாக்கா நோட்டிலிருந்த படமும் ஒத்துப்போனது.

தொடர்ந்து தேடியபோது வங்கதேசத்திலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. கடந்த 2019 ஜூலை 13ம் தேதிதான் இந்த செய்தியை வெளியிட்டிருந்தனர். அதை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். அதில், ஒருவரின் ஃபேஸ்புக் தகவலில் இருந்து எடுத்து அதை அப்படியே பகிர்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அந்த செய்தியில், இந்த குழந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டது. டாக்கா நகரில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இந்த சிறுமியை சமீபத்தில் ஒருவர் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சிறுமியின் உறவினர்கள் இதைப் பார்த்து அந்த நபரை அணுகியுள்ளனர். ஆனால், அதன்பிறகு அந்த சிறுமியை அந்தப் பகுதியில் காணமுடியவில்லை. இந்த குழந்தையைக் காண்பவர்கள் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவியுங்கள் என்று இரண்டு மொபைல் எண் கொடுக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து தேடியபோது குழந்தை பற்றிய தகவல் தவறானது என்று wabnews24.com என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதுவும் 2019 ஜூலை 13ம் தேதிதான் வெளியாகி இருந்தது. அந்த செய்தியில், “இந்த குழந்தையின் படம் பல மாதங்களாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், குழந்தையின் உண்மை நிலையை கண்டறிய எங்கள் இணைய குழு முடிவு செய்தது.

Child Trafficking 6.png

wabnews24 குழுவின் உறுப்பினர் ஒருவர், இந்த குழந்தையை வங்கதேசத்தின் பிரம்மன்பாரியா ரயில் நிலையம் அருகில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். அதைக் கருத்தில்கொண்டு அந்த பகுதியில் தேடியபோது குழந்தை பற்றிய தகவல் கிடைத்தது. குழந்தையின் பெயர் நுபூர். அபுல் மியா மற்றும் அக்லிமா பேகம் ஆகியோரின் இளைய மகள் இவர் என்று தெரிந்தது. அந்த சிறுமி அந்த பகுதியில் பிறந்து, அந்த பகுதியில் வளர்ந்து வருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், பிச்சை எடுக்கும் படம் உண்மையா, உண்மையில் அந்த சிறுமி பிச்சை எடுக்கிறாரா என்று எந்த தகவலும் அதில் இல்லை. அதே நேரத்தில், குழந்தையின் சமீபத்திய படத்தையும் பகிர்ந்திருந்தனர்.

நம்முடைய ஆய்வில்,

1) குழந்தை கையில் வைத்திருந்த தட்டிலிருந்த பணம் இந்திய ரூபாய் நோட்டு இல்லை, வங்க தேச பணம் என்பது உறுதியானது.

2) வங்க தேசத்தில் இந்த சிறுமியின் படம் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

3) சிறுமி படம் தொடர்பாக வங்கதேச நாளிதழ் வெளியிட்ட செய்தி கிடைத்துள்ளது.

4) சிறுமி வங்கதேசத்தில் தன்னுடைய பெற்றோருடன் உள்ளார் என்று படத்துடன் வெளியான மற்றொரு செய்தி கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட படத்தில் இருக்கும் சிறுமி கர்நாடக மாநிலத்தில் தமிழக பிச்சைக்காரர்களால் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறார் என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வைரல் ஆன கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிச்சை எடுக்கும் அழகான சிறுமி படம்! – உண்மை அறிவோம்

Fact Check By: Chendur Pandian 

Result: False