
நேபாளத்தில் நடந்த Gen Z போராட்டத்தின் போது மசூதி ஒன்று எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாளத்தில் #genz குட்டி குஞ்சான்ஸ் நடத்திய போராட்டத்தில் மசூதிகளை தீ வைத்து கொளுத்திட்டானுக 🙄🙄🙄🙄” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நேபாளத்தில் Gen Z போராட்டம் வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிட்டத்தட்ட அமைதி திரும்பிவிட்டது. இந்த நிலையில் போராட்டக்காரர்களால் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதாக சிலர் இப்போது பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோவை சமீப நாட்களாக மசூதி எரிக்கப்பட்டதாக கூறி பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் ஒரு மாதத்துக்கு முன்பாக இந்த கட்டிடம் எரிக்கப்பட்டது தொடர்பான வேறு சில வீடியோக்கள் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
அந்த பதிவுகளில் பிர்கஞ்ச் (Birgunj) என்ற ஊரின் மேயரின் வீட்டை ஜென் ஸீ போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் வீட்டின் முகப்பில் ஸ்வஸ்திக் சின்னம் இருந்தது. அதே சின்னம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலும் காண முடிந்தது. மேலும், வீட்டுக்கு அருகே இருந்த சாலை, வீட்டின் மதில் சுவர், கேட் எல்லாம் இரண்டு வீடியோக்களிலும் ஒன்றாகவே இருந்தது. இதன் மூலம் இது மசூதி இல்லை என்பது தெளிவானது.
வீட்டின் முன்புறம் பச்சை நிறத்தில் செடிகளுக்கு கட்டப்படும் துணியைக் கட்டி வைத்துள்ளனர். இதை வைத்து அந்த கட்டிடம் மசூதியாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது. Gen Z போராட்டத்தின் போது பீர்கஞ்ச் மேயரின் வீட்டைப் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்த வீடியோவை, மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நேபாளம் Gen Z போராட்டத்தில் பிர்கஞ்ச் என்ற நகரின் மேயரின் வீட்டை கலவரக்காரர்கள் எரித்த வீடியோவை மசூதி எரிக்கப்பட்டதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:நேபாளம் Gen Z போராட்டத்தில் மசூதி எரிக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False


