
‘’நகை திருடனை சந்தித்து நன்றி சொன்ன லலிதா ஜூவல்லரி உரிமையாளர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு சென்டிமெண்ட் கதையை காண நேர்ந்தது. இது உண்மையா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link 1 | Asianet News Link | Archived Link 2 |
ஏசியாநெட் தமிழ் நியூஸ் இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனையே தங்களது இணையதளத்திலும் செய்தியாக பதிவிட்டுள்ளனர். இந்த செய்தியில், ‘’திருச்சி லலிதா நகைக் கடையில் திருடிய குற்றவாளியை சிறைக்குச் சென்று லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் ரெட்டி நன்றி தெரிவித்தார். தனது நகைக்கடையில் ஏதேனும் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதா அல்லது யாரேனும் லலிதா ஜூவல்லரி ஊழியர் திருட்டிற்கு உதவினாரா என்ற சந்தேகம் இருந்ததாகவும், ஆனால், திருடன் யாரும் உதவவில்லை எனக் கூறியதை கேட்டு அவர் நெகிழ்ந்து போனார்,’’ என வித விதமாக கதை எழுதியிருந்தனர். எனினும், எந்த குற்றவாளியை கிரண் ரெட்டி சந்தித்துப் பேசினார் என இதில் கூறப்படவில்லை.
அதேசமயம், ஒன் இந்தியா போன்ற ஊடகங்கள் இந்த வழக்கில் தொடர்புடைய முருகனை, லலிதா ஜூவல்லரி உரிமையாளர் சந்தித்து நன்றி தெரிவித்தார் எனக் கூறி பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.
Archived Link
இதுதவிர, மேலும் நிறைய ஃபேஸ்புக் பயனாளர்கள், இதே கதையை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை தொழில் தெரிந்த, கணிசமான ஊடகங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அதனால், அவர்கள் பகிரும் செய்திகளில் நம்பகத்தன்மை இருந்தது.
ஆனால், நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால், ஆளாளுக்கு ஆன்லைன் செய்தித் தளம், யூ ட்யூப் சேனல், ஃபேஸ்புக், ட்விட்டர் பேஜ்களை தொடங்கி, செய்தி பகிர்கிறேன் என்ற பெயரில், அன்றாடம் வதந்திகளை பரப்புவதை பலரும் வாடிக்கையாகச் செய்து வருகின்றனர். ஊடகம் என்றால் என்ன என்றே தெரியாமல் தனக்குத்தான் எல்லா உண்மையுமே தெரியும் என்பதுபோல இவர்கள் பகிரும் வதந்திகள், கட்டுக்கதைகளை சாமானிய மக்கள் உண்மை என நம்புவதும் வழக்கமாக உள்ளது.
குறிப்பாக, ஏதேனும் ஒரு பரபரப்புச் சம்பவம் நிகழ்ந்துவிட்டால், உடனே அதில் தொடர்புடைய நபர் போல தன்னை நினைத்துக் கொண்டு, ‘’மனோகரா பொறுத்தது போதும் பொங்கியெழு; அந்த வேதனை இருக்கே, அந்த வேதனை,’’ என்றெல்லாம் வித விதமான தலைப்புகளில் இவர்களாகவே மானே, தேனே கட்டுக்கதைகளை எழுதி வடை சுட்டு , ஆன்லைனில் விற்கின்றனர்.
அதிலும், ‘’நான்தான் திவ்யா அப்பா பேசுகிறேன்’’; ‘’நான்தான் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளனின் தாய் பேசுகிறேன்’’; ‘’நான்தான் அனிதாவின் அண்ணன் பேசுகிறேன்’’; ‘’நான்தான் புலனாய்வுப் புலி ஆந்தைக் கண்ணன் பேசுகிறேன்‘’; ‘’நான்தான் ராஜராஜ சோழனின் ஒன்னு விட்ட அக்கா பையன் பேசுகிறேன்‘’; ‘’ராஜ ராஜ சோழன் எனக்கு சித்தப்பாதான், அவனைக் கீழே தள்ளி கொன்றது அவன் மகன் ராஜேந்திர சோழன்தான்,’’ எனக் கூறிக் கொண்டு, இவர்களாகவே, ஒரு குற்றச் சம்பவத்தில் விதவிதமான கருத்துகளை தப்பு தப்பாக வரைமுறையின்றி எழுதி, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மற்றும் யூடியுப் சேனல்களில் வெளியிடுகின்றனர். இதைவிடக் கொடுமை இத்தகைய மூன்றாந்தர டுபாக்கூர் செய்திகளை உண்மை என நம்பிக் கொண்டு, சமூக ஊடகங்களில் கோஷ்டி சண்டை போடும் மூடர் கூட்டமும் நிறையவே உள்ளனர்.
அப்படிப்பட்ட இளிச்சவாயன்களை நம்பி வெளியிடப்பட்ட செய்திதான் மேற்கண்ட லலிதா ஜூவல்லரி கிரண் ரெட்டி நன்றி கூறிய நிகழ்வு. உண்மையில், அப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை.
இப்படி ஒருவேளை கிரண் ரெட்டி, லலிதா நகைக் கடை திருடனை நேரில் சந்தித்துப் பேசியிருந்தால், அது அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச்செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த செய்தியை வெளியிட்டவர்கள், வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்பி கடை நடத்துவோர் மட்டுமே.
தனது கடையில் திருடிய ஒருவனை யாராவது நேரில் சந்தித்து நன்றி கூறுவாரா என்ற அடிப்படை சிந்தனை கூட இன்றி இந்த வாட்ஸ்ஆப் கதையை உண்மைச் செய்தி போல வெளியிட்டு, தங்களுக்கு உள்ள ஆள் பலத்தை வீணடித்ததோடு, பொதுமக்களின் நேரத்தையும் இவர்கள் வீணடித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருச்சி மாநகர போலீசாரை தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்கள், ‘இப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை,’ எனக் கூறியதோடு, ‘சமூக ஊடகங்களின் வருகையால் நிறைய வதந்திகள் எந்த ஆதாரம் இன்றி பரப்பப்படுகின்றன. இவற்றை பார்த்தாலே வதந்தி என எளிதாக தெரிந்துவிடும். இதுபோன்ற வாட்ஸ்ஆப் கதைகளை உண்மை என எதன் அடிப்படையில் நம்பிக் கொண்டு நீங்களும் ஏன் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி நேரத்தை வீணடிக்கிறீர்கள்,’’ என்று நம் முகத்திலேயே காறி துப்புவதுபோல கண்டித்தனர்.
மொத்தத்தில் இதுபோன்ற வாட்ஸ்ஆப் வதந்திகளை உண்மை என நம்பி யாரும் பகிராதீர்கள். இவற்றை நம்பினால், கால விரயம் மற்றும் மன உளைச்சல்தான் மிஞ்சும் என வாசகர்களுக்கு நாமும் அறிவுறுத்த விரும்புகிறோம்.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெறாத ஒரு சம்பவத்தை உண்மை போல கட்டுக்கதை பரப்பியுள்ளனர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Title:நகை திருடனை சந்தித்து நன்றி சொன்னாரா லலிதா ஜூவல்லரி உரிமையாளர்?
Fact Check By: Pankaj IyerResult: False

நன்றி….
Thanks bro for the given information, iam also believed that news ?so sad you have done a fantastic job bro keep doing this honestly, all the best and still now getting follow to you ☺?
இப்படி”உண்மையை புலனாய்வு செய்வது வரவேற்கத்தக்கது