மாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி?

அரசியல் | Politics சமூக வலைதளம்

ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கல்லூரி மாணவிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பியோடுவதாகக் கூறி ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, ராகுல் காந்தி நிஜமாகவே அப்படிச் செய்தாரா அல்லது எதிர்க்கட்சியினர் யாரும் இப்படி வதந்தி பரப்புகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

வதந்தியின் விவரம்:

அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல்

இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி கேட்ட மாணவி நிகழ்ச்சியை நிறுத்தி வெளியேறிய ராகுல் !

தமிழகத்தில் ராகுல் காந்தி மாணவிகளை சந்தித்து உரையாடினார் அதேபோல் அரியானாவில் மாணவிகளை சந்தித்தார் .. ஒரு கேள்வி ஒரே கேள்வி அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல்

ஹரியானவை சேர்ந்த 2 – ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மேனகா என்ற மாணவி கேட்ட ஒற்றை கேள்வி அந்த நிகழ்ச்சியை ராகுல் முடித்துக்கொண்டு வெளியேற காரணமாக இருந்திருந்தது.

மாணவி கேட்ட கேள்வி ‘ நேற்று ஐ நா சபையில் தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் சட்டத்திற்கு சீனா முட்டு கட்டை போட்டது

இதற்கு நீங்கள் மோடியை சீனாவிடம் அடிபணிந்து செல்கிறார் என்று கூறினீர்கள். முதலில் ஐ நா நமக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை சீனாவிற்கு கொடுத்ததே உங்கள் தாத்தா நேருதான் தெரியுமா?

அதனை வைத்து தான் இந்தியாவிற்கு எதிராக ஒவ்வொருமுறையும் சீனா விளையாடுகிறது,

வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அடிப்படையில் அவர் அனைத்து மாகாணங்களையும் இந்தியாவுடன் இணைத்துவிட்டார்.

ஆனால் உங்கள் தாத்தாவிடம் கொடுக்கப்பட்ட ஒரே பொறுப்பு காஸ்மீர் பிரச்னை ஆனால் அந்த காஷ்மீரை இன்றுவரை பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டார். இப்படி இருக்க நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பீர்கள் இதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டார்.

அவ்வளவுதான் தனது நிகழ்ச்சியை எப்போதும் மவுனமாக சிரிப்பதுபோல் சிரித்து கொண்டு பதில் சொல்லமுடியாமல் வெளியேறிவிட்டார், இந்த தகவல்கள் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றன,

ஆனால் தமிழக ஊடகங்கள் மட்டும் வெளியில் சொல்லவில்லை. இதை பற்றி வாயே தொறக்கவில்லை.

Archive Link

உண்மை அறிவோம்:
ராகுல் காந்தி தற்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பது மட்டுமின்றி, அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் கருதப்படுகிறார். காங்கிரஸ் கட்சி தலைமையில் நாடு முழுவதும் மிகப்பெரும் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும் வருகிறார். தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராகுல் காந்தி இந்தியா முழுக்க தீவிர சுற்றுப்பயணம் செய்துவருகிறார். ஒரு சில இடங்களில் கல்லூரி மாணவ, மாணவியரையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதன்படி, கடந்த வாரத்தில் சென்னை வந்திருந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில், கடந்த மார்ச் 13ம் தேதியன்று மாணவிகளிடையே உரையாடினார். அப்போது பல சுவாரசியமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். சில கேள்விகளின்போது, அவர் உணர்ச்சிவசப்படவும் செய்தார். ஆனால், எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன் என ராகுல் மறுக்கவில்லை. அவர், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பேசியது தொடர்பான வீடியோ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை சுற்றுப்பயணம் முடிந்ததும், கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் ராகுல் சென்றுவந்துள்ளார். அங்கேயும், சில கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில், கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் உள்ளார். ஆனால், நாம் எடுத்துக் கொண்ட பதிவில், ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில், மேனகா என்ற மாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடியதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

ஒருவேளை, தமிழகம், கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, மணிப்பூர் சென்றதுபோல, ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்திற்கும் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், ராகுல் காந்தியின் நிகழ்ச்சி நிரல் பற்றி, காங்கிரஸ் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தகவல் தேடினோம். அதன் விவரத்தை, நமது வாசகர்கள் இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.

குறிப்பிட்ட நபர் கூறுவதைப் போல, மார்ச் 16ம் தேதியன்று ராகுல் காந்தி, ஹரியானா செல்லவில்லை. அன்றைய நாளில் அவர் உத்தரகாண்ட் சென்றுள்ளார். அதன்பின், மார்ச்  17-ல் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர், மார்ச் 18ம் தேதியன்று கர்நாடகாவிற்குச் சென்றுள்ளார். ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பதாலும், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதாலும் ராகுல் காந்தியை டார்கெட் செய்து, பாஜக போன்ற எதிர்க்கட்சியினர், சமூக ஊடகங்களில், கேலி, கிண்டல் பதிவிடுவதும், காரசாரமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதும் வழக்கமாக உள்ளது. அதன்படியே, இந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர் என, உண்மை கண்டறியும் சோதனையில் கண்டறிந்தோம். இதையடுத்து, குறிப்பிட்ட புகைப்படம் உண்மையான ஒன்றுதானா என்றும், சோதிக்க முயற்சித்தோம்.

இதன்படி, Yandex இணையதளம் சென்று, அந்த புகைப்படம் பற்றி தேடி பார்த்தோம். அதில், இது உண்மையான புகைப்படம்தான் என தெரியவந்தது. இதே புகைப்படத்தை, கூகுளில் தேடியபோது, மத்தியப் பிரதேசம் மாநிலம், கார்கோன் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தகவல் கிடைத்தது.
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, கார்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல், மேடையில் இருந்து இறங்கிச் சென்றபோது, பொதுமக்கள் அழைத்ததால் உடனே காவல் தடுப்பை கடந்து ஓடி, அவர்களை சந்தித்து பேசினார் என்றும் அதுதொடர்பான செய்தியில் கூறப்பட்டுள்ளது. செய்தி பற்றி படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.

ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேற்கூறிய ஆதாரங்களின்படி, பார்க்கும்போது, நமக்கு தெரியவந்த உண்மை விவரம்,
1) குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் ராகுல் காந்திதான்.
2) ஆனால், அந்த புகைப்படம் ஹரியானாவில் எடுக்கப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி எடுக்கப்பட்டது.
3)  நாம் குறிப்பிடும் ஃபேஸ்புக் வதந்தியில் இருப்பதுபோல, ராகுல் காந்தி, மாணவியின் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் தப்பி ஓட முயற்சிக்கவில்லை. மாறாக, பொதுமக்களை சந்திக்கவே அவ்வாறு ஓடியுள்ளார்.
4) பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போது நடந்ததைப் போல சித்தரித்துள்ளனர். மேலும், அவர்கள் குறிப்பிடும் சம்பவம் எதுவும் உண்மையில் நடக்கவில்லை.
5) வதந்தியில் குறிப்பிடப்படும் நாளில், ராகுல் காந்தி உத்தரகாண்ட் சென்றுள்ளார். ஹரியானா செல்லவே இல்லை.

முடிவு:
ராகுல் காந்தியின் புகைப்படம் உண்மைதான். ஆனால், அதுபற்றி கூறப்படும் தகவல் போலியான ஒன்றாகும். இதனை உரிய ஆதாரங்களின்படி, நாம் நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

Avatar

Title:மாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி?

Fact Check By: Parthiban S 

Result: False