க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்; உண்மை அறிவோம்!

அரசியல் சமூக வலைதளம்

‘’க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும், ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

Students Against Corruption 2.0 எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஒரு வயதான பெண் மற்றும் இளம் வயது பெண் ஆகியோருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உள்ளது. அந்த 2 பெண்களும், அவரது 2 மனைவிகள் என, இதனை பகிர்ந்தவர் எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை அறிவோம்:
திமுக.,வின் பொதுச் செயலாளராக கடந்த 1977ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் க.அன்பழகன். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக, அவர் இறக்கும் வரையில் வலம் வந்த அன்பழகன், தற்போது உடல்நலக் குறைவால், 96 வயதில், மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளார்.

இவருக்கு மொத்தம் 2 மனைவிகள். அதில், முதலாவது மனைவி வெற்றிச்செல்வி கடந்த 1950களிலேயே உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு, சாந்தகுமாரி என்பவரை 2வது மனைவியாக, அன்பழகன் மணந்துகொண்டார். இதில், சாந்தகுமாரி கடந்த 2012ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

அன்பழகனின் முதல் மனைவி வாரிசுக்கும், 2வது மனைவி வாரிசுகளுக்கும் இடையே நடைபெற்ற சொத்து பிரச்னை அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விசயமாகும். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில்தான் மேற்கண்ட புகைப்படத்தை பகிர்ந்து, க.அன்பழகன் பற்றி வதந்தியை கிளப்பியுள்ளனர்.

இதையடுத்து, இந்த புகைப்படத்தை, க.அன்பழகனின் குடும்ப நண்பர் ஒருவரிடம் காட்டி இதுபற்றி விளக்கம் கேட்டோம். அவர் எடுத்த எடுப்பிலேயே இது தவறான தகவல் எனக் கூறிவிட்டார். இந்த புகைப்படத்தில் அன்பழகனுடன் இருப்பவர்கள் அவரது தாயார் சொர்ணாம்பாள் மற்றும் 2வது மனைவி சாந்தகுமாரி என்றும், முதல் மனைவி வெற்றிச் செல்வி இறந்தபிறகே அன்பழகன் 2வது திருமணம் செய்துகொண்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, இந்த புகைப்படத்தை பார்த்தாலே நன்றாக தெரிகிறது. அன்பழகனும், அவரது 2வது மனைவி சாந்தகுமாரியும் இளம் வயதில் உள்ளனர். ஆனால், வயதான அவரது தாயை, முதல் மனைவி எனக் கூறியுள்ளது மிகவும் பொருத்தமற்ற செயலாக உள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மை விவரம்,

1) க.அன்பழகனுக்கு 2 மனைவிகள் என்பது உண்மைதான்.
2) ஆனால், 1வது மனைவி வெற்றிச்செல்வி இறந்த பிறகுதான், சாந்தகுமாரியை 2வதாக திருமணம் செய்துகொண்டார்.
3) மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் க.அன்பழகன், அவரது தாயார் சொர்ணாம்பாள் மற்றும் 2வது மனைவி சாந்தகுமாரி ஆகியோர்தான்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் பற்றிய தகவல் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்; உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •