
பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பா.ஜ.க தலைவர்கள் வெளியேறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வெளியேறுவது போல உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். நாற்காலியை விட்டு எழுந்து செல்லும்போது சிலர் பெட்ரோல் விலை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர்.
நிலைத் தகவலில், “நேற்று மகராஷ்டிரா சிவசேனா காங்கிரஸ் கூட்டணி அரசை விமர்சனம் செய்ய மகாராஷ்டிரா பாஜக சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. …. முதல் கேள்வியாக பத்திரிகையாளர் பெட்ரோல் டீசல் விலை குறித்து கேட்டவுடன் பாஜக தலைவர்கள் துண்டைகாணும் துணியைகாணும் னு ….தலைதெறிக்க ஓடிய அற்புதமான காட்சி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை அறிவொளி | WINSPIRATION என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Faizal Faizal என்பவர் 2020 ஜூன் 28ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பேட்டி அளிக்க வந்தவர்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேட்டதால் வெளியேறினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட நேரம் பேட்டி அளித்துவிட்டுச் செல்வது போலவே உள்ளது. ஒரு நிமிடத்தில் அவர்கள் வெளியேறினார்கள் என்றால், வந்து அமர்ந்தது முதல் கேள்வி கேட்டதும் வெளியேறும் வரையிலான ஒரு சில நிமிட வீடியோவை வெளியிட்டிருக்கலாம். ஆனால், பதில் சொல்லி முடிந்த பிறகு எழுந்திருப்பது போன்று வீடியோ இருப்பதால், இதில் நமக்கு சந்தேகம் ஏற்பட்டது.
படத்தின் காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பெட்ரோல் விலை உயர்வு பற்றி கேட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு சென்ற முன்னாள் முதல்வர் ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் என்று குறிப்பிட்டு செய்தி வெளியாகி இருந்தது.
எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி பிரிவைத் தொடர்புகொண்டு, இந்த சம்பவம் உண்மையா என்று கேட்டோம். அப்போது அவர்கள் கடந்த 24ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரில் வைத்து முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் லைவ் செய்துள்ளார். அதனால், கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றார் என்று கூறுவது தவறு என்றனர்.
மேலும், இது தொடர்பாக மராத்தியில் பரவிய தகவல் தொடர்பாக வெளியிட்ட செய்தியின் இணைப்பையும் நம்மிடம் கொடுத்தனர். மராத்தியில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் சமூக ஊடக பக்கங்களில் இது தொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ட்விட்டர், யூடியூப் பக்கங்களில் சோலாபூர் பேட்டியை நேரடி ஒளிபரப்பு செய்தது தெரிந்தது. அந்த வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் அவர் 23.23 நிமிடங்கள் பேட்டி அளித்திருப்பது தெரிந்தது.
பல மராத்தி செய்தி ஊடகங்கள் அந்த பேட்டியை தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.
யூடியூபில் மேலும் சில பேட்டி தொடர்பான வீடியோக்கள் கிடைத்தன. அதை பார்த்தபோது, பேட்டி முடிந்து ஃபட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் எழுந்திருக்கும்போது சிலர் பெட்ரோல், பெட்ரோல் என்று குரல் எழுப்புகின்றனர். அதற்கு ஃபட்னாவிஸ் இது பற்றி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். எண்ணெய் விலை நிர்ணயம் செய்வது நிறுவனங்கள்தான். மத்திய அரசுக்கு இதில் நேரடி தொடர்பில்லை என்று கூறிவிட்டு செல்கிறார். அதன் பிறகு யாரும் பெட்ரோல் விலை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பவில்லை.
இதன் மூலம்,
பேட்டி தொடங்கிய வேகத்தில் முடிந்தது என்று கூறுவது தவறானது. 23 நிமிடத்துக்கு மேலாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி முடிந்து வெளியே செல்லும்போது பெட்ரோல் டீசல் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதற்கு அவர் பதில் கூறியதை கட் செய்துவிட்டு பயந்து வெளியேறியது போல குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஃபட்னாவிஸ் பதில் அளித்துவிட்டே சென்றுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்கிய வேகத்தில் முடித்துவிட்டு பா.ஜ.க தலைவர்கள் வெளியேறினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்? உண்மை இதோ!
Fact Check By: Chendur PandianResult: False
