
மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாத பூஜை செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது. இததைப் பற்றி ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
அருள்புரிவாயே ஆதிபராசக்தி!!! தாயே!!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்கிறார். அருகில், கவிஞர் கனிமொழி இருக்கிறார். மே 1ம் தேதி டிஎம்கே ட்ரோல் மீ மீ என்ற பக்கம் இதை வெளியிட்டுள்ளது. பார்க்கும்போதே மார்ஃபிங் செய்யப்பட்ட படம் என்பது தெரிகிறது. இருப்பினும் பலரும் இதனை உண்மை என நம்பி, அதிகளவில் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
கடந்த மே 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தையொட்டி தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். உழைப்பாளர் தின பேரணி என்பதால் சிவப்பு நிற சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றார் மு.க.ஸ்டாலின். பேரணியின் முடிவில், உழைப்பாளர் தின நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அவர் சிவப்பு நிற சட்டை அணிந்தது தொடர்பாக நிறைய மீம்ஸ் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் சிவப்பு நிற சட்ட அணிந்து, சாமி சிலைக்கு மலர் தூவி வழிப்பட்டது போன்ற போலி புகைப்படம் வைரல் ஆனது. இது போலியான படம் என்று நாம் ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தோம். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதே நேரத்தில், முதலமைச்சர் பதவி கிடைக்க பெண் தெய்வத்தை வணங்க வேண்டும் என்று ஜோசியர் கூறியதாகவும், மே தின ஊர்வலத்தை சாக்காக வைத்து மு.க.ஸ்டாலின் செந்நிற ஆடை அணிந்து, மேல் மருவத்தூர் வந்து பூஜை செய்து சென்றார் என்றும் ஒரு விஷம செய்தி வெளியானது. அதுவும் தவறு என்று நிரூபிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்நிலையில், மே தின நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்திய படத்தை மார்ஃபிங் செய்து, பங்காரு அடிகளார் காலில் பூ தூவி மரியாதை செலுத்துவது போல் மார்ஃபிங் செய்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் மே தின நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவும் அசல் படம் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நமக்குக் கிடைத்தது.
அந்த படம் கீழே…

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் படம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது, மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை விழா தொடர்பான வீடியோ கிடைத்தது. 2014 ம் ஆண்டு இந்த வீடியோ அப்லோடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை பார்த்தபோது. 1.08வது நிமிடத்தில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இருந்த பங்காரு அடிகளார் காட்சி கிடைத்தது. அதில், பங்காரு அடிகளார் பாதத்துக்கு அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மலர்களால் பாதபூஜை செய்வது தெரிந்தது.

லட்சுமி பங்காரு அடிகளார் உள்ளிட்டவர்கள் பாத பூஜை செய்யும் படத்தில், மே 1ம் தேதி, தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்திய படத்தை மார்ஃபிங் செய்து வைத்து போலியான படம் தயாரிக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. படத்தை உற்றுப் பார்த்தால், லட்சுமி பங்காரு அடிகளார் கைகள் நன்கு தெரியும்.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பங்காரு அடிகளார் காலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் படம் மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று, பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஸ்டாலின், பங்காரு அடிகளார் தொடர்பான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
