பசி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Coronavirus அரசியல் இந்தியா சமூக ஊடகம்

ஊரடங்கு நேரத்தில் பசி கொடுமை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினரின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியின் ஏழைகளை ஒழிக்கும் திட்டம் துவங்கிவிட்டது (பசியின் கொடுமையால் உத்தரப்பிரதேசத்தில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தமிழன் மு.செ. பாலா திருச்சி என்ற ஃபேஸ்புக் ஐடி நபர் பகிர்ந்துள்ளார். பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பசியின் கொடுமை காரணமாக ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டதாக பகிர்ந்துள்ளனர். மேலும், மோடியின் ஏழைகளை ஒழிக்கும் திட்டம் தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த சம்பவம் தற்போது நடந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவது தெரிந்தது. அனைத்திலும் ஊரடங்கு காரணமாக உத்தரப்பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட குடும்பம் என்று குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து தேடியபோது பத்ரிகா என்ற இணையதளத்தில் இந்த தற்கொலை செய்தி 2020 பிப்ரவரி 1ம் தேதி வெளியாகி இருப்பது தெரிந்தது. 

Search Link

அந்த செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் இந்த சம்பவம் நடந்தது. ஷியாமா என்பவர் வீடு இரண்டு நாட்களாக திறக்கப்படாமலேயே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் வந்து கதவை உடைத்து பார்த்தபோது தாய் மற்றும் நான்கு மகள்கள் இறந்துகிடந்தனர். அவர்கள் வீட்டிலிருந்து விஷமும் கைப்பற்றப்பட்டது. ஷியாமாவின் கணவர் ராம் பரோசா மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்து வந்துள்ளார். போதுமான வருமானம் இல்லாத நிலையில், மது பழக்கமும் அவருக்கு இருந்துள்ளது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. 

patrika.comArchived Link 1
amarujala.comArchived Link 2
powerpostnews.pageArchived Link 3

கதவு உடைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ராம் பரோசா வீட்டுக்கு வந்து மனைவி, மகள்களுடன் சண்டைபோட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு பூட்டப்பட்ட வீடு திறக்கப்படவில்லை. கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ராம் பரோசாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இந்த செய்தியில் தற்கொலை செய்துகொண்டவர்கள் படம் இல்லை.

amarujala.com என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியில் தற்கொலை செய்துகொண்ட ஐந்து பேரின் படமும் இருந்தது. அதிலும் மேலே குறிப்பிட்ட அந்த செய்தியை இருந்த தகவல் இடம் பெற்றிருந்தது. powerpostnews.page என்ற இணையதளம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை 2020 பிப்ரவரி 2ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது.

இந்த செய்திகள் எல்லாம் இந்தியில் இருந்தன. அதை மொழி மாற்றம் செய்து பார்த்தோம். ஆங்கிலத்தில் செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தபோது டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது.

timesofindia.indiatimes.comArchived Link

பிரதமர் மோடி ஊரடங்கை மார்ச் 24ம் தேதி அறிவித்தார். மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்த தாய், நான்கு மகள்கள் தற்கொலை நிகழ்ந்துள்ளது.

பழைய படத்தை எடுத்து தற்போது ஊரடங்கு உள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட குடும்பம் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளனர். இது தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதால் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பசி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False