
தமிழகத்தின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சுஜிதாவை வாழ்த்துவோம் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இன்றைய முக்கிய செய்தி… தமிழகத்தின் இரண்டாவது. I p s. பெண் அதிகாரி. இஸ்லாமிய பெண்… முடிந்தால் வாழ்த்துவோம்…
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சுஜிதா முகமதுவின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. “படத்தின் மீது, தமிழகத்தின் இரண்டாவது பெண் இஸ்லாமிய ஐ.பி.எஸ் அதிகாரி சுஜிதா முகம்மது” என்று எழுதப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இன்றைய முக்கிய செய்தி. தமிழகத்தின் இரண்டாவது ஐ.பி.எஸ் பெண் அதிகாரி, இஸ்லாமிய பெண், முடிந்தால் வாழ்த்துவோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை, அஜித் குமார் என்ற பெயர் கொண்ட ஃபேஸ்புக் பதிவாளர் 2019 ஜூன் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். ஏராளமானோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நிலைத் தகவலில் தமிழகத்தின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் இரண்டாவது இஸ்லாமிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் எது சரி, எது தவறு என்ற குழப்பம்தான் வருகிறது.
முதலில், நிலைத்தகவலில் கூறியுள்ளதை ஆய்வு செய்தோம்.
தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி. அதன் பிறகு ஏராளமான பெண்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். படத்தில் இருக்கும் சுஜிதா முகம்மதுதான் இரண்டாவது என்று சொல்ல முடியாது. மேலும், தற்போது இவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆனது போல இன்றைய முக்கிய செய்தி என்று பதிவிட்டுள்ளனர். இதை உறுதி செய்ய சுஜிதாவின் பின்னணியை ஆய்வு செய்தோம்.
சுஜிதா முகம்மது 2018ல் இல்லை 2014ம் ஆண்டே கர்நாடக பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பற்றிய பக்கத்தில் தேடியபோது இது உறுதியானது.

சுஜிதா முகம்மது தமிழகத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றியவர். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து இந்து தமிழுக்கு அவர் அளித்த பேட்டி நமக்குக் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் 1976ம் ஆண்டு திலகவதி பணியில் இணைந்தார். இதன் மூலம் முதல் தமிழக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெயரைப் பெற்றார். அதன் பிறகு வேறு யாருமே தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வரவில்லையா என்ற கேள்வி எழுந்தது. லத்திகா சரண், அர்ச்சனா ராமசுந்தரம் என்று பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியாற்றி இருந்தாலும் இவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாடு கேடரில் வந்தவர்கள் என்பது தெரிந்தது.
சரி, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே ஐ.பி.எஸ் அதிகாரியாக யாராவது பணியில் சேர்ந்துள்ளார்களா என்று மத்திய அரசின் இணையதளத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அதில், 1982ம் ஆண்டில் இருந்து மட்டுமே தகவல் கொடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்தோம், அப்போது 1986ம் ஆண்டு ஶ்ரீலட்சுமி பிரசாத் என்பவர் தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானது தெரிந்தது. அவருடைய பேட்டி தந்தி டிடி நெக்ஸ்டில் வெளியாகி உள்ளது. சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பி.எஸ்சி விலங்கியல் படித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆனதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, பல பெண்கள் தமிழகத்தில் இருந்து தமிழகத்திலேயே ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வந்துள்ளனர்.



இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சுஜிதாவை தமிழகத்தின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறுவது தவறானது என்று உறுதியானது. தமிழகத்தில் இருந்து வேறு யாராவது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றுள்ளாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
இவருக்கு முன்பு 2008ம் ஆண்டு அஜிதா பேகம் என்பவர் ஐ.பி.எஸ் அதிகாரியானார். இவரும் தமிழ்நாட்டில் பணி புரியவில்லை. கேரள மாநில கேடரில் அவர் பணியாற்றி வருகிறார். தற்போது மத்திய அரசு பணியில் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் பணியாற்றி வருவதாக தகவல் கூறுகிறது. ஆக, இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான்… ஆனால், தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் இல்லை. அஜிதா கேரள மாநில ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், சுஜிதா முகம்மது கர்நாடக மாநில ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் பணியாற்றி வருவது உறுதியானது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சுஜிதா முகம்மது தமிழகத்தின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற தகவல் தவறாது என்று உறுதியாகிறது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் படத்திலேயே மிகத் தெளிவாக இரண்டாவது இஸ்லாமிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று குறிப்பிட்டுள்ளது. அதை அப்படியே பகிர்ந்திருந்தால் கூட குழப்பம் ஏற்பட்டு இருக்காது. ஆனால், அவரை தமிழகத்தின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று குறிப்பிட்டிருப்பது தவறானது ஆகும்.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழகத்தின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சுஜிதாவா?
Fact Check By: Praveen KumarResult: False
