
நான் ரயிலில் பயணித்ததே இல்லை, அதனால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை. நானே என் குடும்பத்தாரோ, என்னைச் சேர்ந்தவர்களோ இரயிலில் பயணித்ததே இல்லல் விமானப் பயணங்களை மட்டுமே மேற்கொள்கிறோம், அதனால் ஒடிசா இரயில் விபத்து என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை – மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “இதெல்லாம் இந்தியாவின் சாபக்கேடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை Surya Dmk என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயத்தின் விலை உயர்ந்த போது, வெங்காயம் சாப்பிடுவது இல்லை, அதன் விலை உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. அதே தொனியில் நான் ரயிலில் பயணிப்பது இல்லை, அதனால் ரயில் விபத்து என்னை பெரிதாக பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டின் பின்னணி டிசைன் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ரயில் விபத்து வருத்தம் அளிக்கிறது என்று ட்வீட் செய்திருந்தது தெரிந்தது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவானது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.

முதலில் புதிய தலைமுறையில் இப்படி ஏதேனும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் 2023 ஜூன் 5ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. அடுத்ததாக இது போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:விமானத்தில் பயணம் செய்வதால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
