
“தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் நாட்டு நலனுக்காக நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொள்ளுதல் போன்ற சில தியாகங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்…
தகவலின் விவரம்:

2019 ஜூலை 2ம் தேதியிட்ட தந்தி டிவி நியூஸ்கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில், “தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் நாட்டு நலனுக்காக நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொள்ளுதல் போன்ற சில தியாகங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி” என்று உள்ளது.
இந்த பதிவை, ஆ. பகலவன் என்பவர் 2019 ஜூலை 2ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “நாங்கள் தியாகம் எல்லாம் செய்ய முடியது , எங்களை வெட்டி விட்டுருங்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தி அடிப்படையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னேறிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் டாப் 10க்குள் இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்களிடமிருந்து அதிக அளவில் வரி வருவாய் பெரும் மத்திய அரசு உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதியை அளிப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு அதிக நிதி உதவி செய்வதில் தவறு இல்லை. அதற்காக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் முதுகெலும்பை உடைப்பது சரியில்லை என்று வளர்ச்சியடைந்த மாநிலங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயில் பெரும்பகுதி மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழக நலனுக்கு அது கிடைப்பது இல்லை என்ற கருத்து பொதுவாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் நாட்டு நலனுக்காக நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொள்ளுதல் போன்ற சில தியாகங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். மேலோட்டமாக பார்க்க இது உண்மை போலத் தெரிந்ததால் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த தகவல் உண்மைதானா என்று ஆய்வு நடத்தினோம். ஜூன் 2ம் தேதி பிரதமர் மோடி இது தொடர்பாக ஏதாவது பேசினாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். ஆனால் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்துக்கு மோடி வருகிறார் என்ற செய்திகள் கிடைத்தன.
தந்தி டிவி-யில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அதேபோன்ற நியூஸ் கார்டு கிடைத்தது.

ஆனால், அதில், “பிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி” என்று இருந்தது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை ஆய்வு செய்தோம். அதில், மோடி கூறியதாக உள்ள பகுதி மட்டும் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தந்தி டிவி-யின் வழக்கமான ஃபாண்ட், டிசைன், பின்னணி வாட்டர்மார்க் டிசைன் எதுவும் இல்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்று உறுதியானது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க சொன்ன மோடி!” –தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
