FACT CHECK: தமிழ்நாடு அரசு தரும் ரூ.2000 உதவிப் பணம் வேண்டாம் என்று எல்.முருகன் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.2000ம் தங்களுக்குத் தேவையில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 வெளியிட்டது போன்று பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.முக கொடுக்கும் 2000 ரூபாய் எங்களுக்கு தேவையில்லை – எல்.முருகன் – ப.ஜ.க” என்று இருந்தது. நிலைத் தகவலில், “இவர் கூறுவது உண்மை என்றால், இவரும் இவரது கட்சியினரும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இந்த தொகையை அனுப்பலாமே! துணிச்சல் இருந்தால் உமது கட்சியினருக்கு இப்படி ஒரு உத்தரவை போடு முருகா பார்க்கலாம்! அப்படியாவது பாஜகவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Manoharan Cpm என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மே 17 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நியூஸ் 7 தமிழ் இந்த டிசைன் நியூஸ் கார்டை பயன்படுத்துவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், தொடர்ந்து இந்த நியூஸ் கார்டில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முன்பு நியூஸ் 7 தொலைக்காட்சியில் பேசும் போது போலியான நியூஸ் கார்டுகள் பரவுவதைத் தவிர்க்க அவ்வப்போது நியூஸ் கார்டின் வடிவமைப்பை மாற்றிக்கொண்டே இருப்போம். இது 3-4 ஆண்டுகளுக்கு முந்தைய டிசைன். இதை தற்போது பயன்படுத்துவது இல்லை என்று கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் பார்த்ததுமே இது போலியானது என்பது நமக்கு தெரிந்தது.

மேலும், 2017ம் ஆண்டு நியூஸ் 7 வெளியிட்ட இதே டிசைன் நியூஸ் கார்டுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தோம். நியூஸ் 7 பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இது இல்லை. மேலும் நியூஸ் கார்டில் தேதியைக் குறிப்பிடுவது அவர்கள் வழக்கம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதில் தேதி இல்லை.

மேலும், நியூஸ் 7 தன்னுடைய இணையதள முகவரியை மாற்றிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், இதில் பழைய இணையதள முகவரியே இருந்தது. மேலும் பா.ஜ.க என்பதை ப.ஜ.க என்று பிழையாக டைப் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இது போலியானது என்று உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஒரு வேளை எல்.முருகன் பேட்டி, அறிக்கை எதிலாவது இந்த கருத்தைத் தெரிவித்துள்ளாரா அதை வைத்து பழைய நியூஸ் கார்டில் தகவல் பரப்பியுள்ளார்களா என்று பார்த்தோம். கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்த வேண்டும் என்று கூறிய செய்தி மட்டுமே கிடைத்தது.

ரூ.2000ம் வேண்டாம் என்று அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதை மேலும் உறுதி செய்துகொள்ள எல்.முருகன் உதவியாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்களும் எல்.முருகன் இவ்வாறு கூறவில்லை என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தி.மு,க வழங்கும் ரூ.2000ம் நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழ்நாடு அரசு தரும் ரூ.2000 உதவிப் பணம் வேண்டாம் என்று எல்.முருகன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •