
‘’ஆர்எஸ்எஸ், பாஜக இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா 32 நாடுகளாகத்தான் பிரிந்திருக்கும்,’’ என்று இளையராஜா கூறியதாக, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டோம். அதில் கிடைத்த விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.
தகவலின் விவரம்:

பெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இசையமைப்பாளர் இளையராஜா அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். சமீபத்தில் 96 என்ற சினிமா படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து இளையராஜா சர்ச்சையில் சிக்கினார். பலரும் அவரது பேச்சை காரசாரமாக விமர்சித்திருந்தனர்.
இதுதவிர, சில மாதங்களுக்கு முன்பாக, இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்து வந்தார் என்பது தவறான தகவல் என பலரும் யூ டியுப்பில் ஆதாரத்துடன் வீடியோ வெளியிடுகிறார்கள் என்று இளையராஜா கூறியிருந்தார். இது கிறிஸ்தவ மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. ஆனால், இளையராஜா கடைசியாக ஊடகங்களில் பேசியது ஜூன் 1ம் தேதி ஆகும். அதன்பின், ஜூன் 2ம் தேதி இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்பிபி உடன் இணைந்து, இளையராஜா பங்கேற்றார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதைத் தவிர ஜூலை 15 அன்று காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசனம் செய்தார். இதுதான் ஊடகங்களில் கடைசியாக அவரைப் பற்றி வெளியான செய்தி. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இறுதியாக, இந்த விசயத்தில் அதிகம் குழப்பிக் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட பதிவர் வெளியிட்டிருந்த கமெண்ட்களை படித்துப் பார்த்தோம். அதில், ஓரிடத்தில், இதற்கு உரிய ஆதாரம் இல்லை என்றும், ஃபேஸ்புக்கில் வெளியான தகவலை நம்பியே இதனை பகிர்ந்தேன் என்றும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவர் கமெண்ட் பகிர்ந்துள்ளதை காண முடிந்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, எந்த ஆதாரமும் இன்றி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் இத்தகைய குற்றச்சாட்டை இளையராஜா மீது தெரிவித்துள்ளார் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் யாரும் இத்தகைய ஆதாரமற்ற செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆர்எஸ்எஸ், பாஜகவை இளையராஜா பாராட்டி பேசினார்: உண்மை அறிவோம்!
Fact Check By: Pankaj IyerResult: False
