
‘’விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராவிட்டால், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்,’’ என்று ராஜேந்திர பாலாஜி கூறியதாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

கடந்த ஆகஸ்ட் 16, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி தராவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது உறுதி – ராஜேந்திர பாலாஜி,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம்தான். ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பது போல, அவர் பேசினாரா என்பது சந்தேகமே. காரணம், கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட, தமிழக அரசு கடைசி வரையிலும் அனுமதி தரவே இல்லை. இந்த ஃபேஸ்புக் பதிவில் சொல்வது போல, ராஜேந்திர பாலாஜி அறிவித்திருந்தால், அவர் இந்நேரம் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்ற கேள்வியும், விமர்சனமும் எழுந்திருக்கும். ஆனால், அப்படி எந்த தகவலும் ஊடகங்களில் வெளியாகவில்லை.
மேலும், சமீபத்தில் ராஜேந்திர பாலாஜி பற்றி வெளியான செய்திகள் பலவும் வேறு ஒன்றாக இருந்தன.

‘’அதிமுக உள்கட்சி விவகாரம் பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார். வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார், என்பது தொடர்பாக அவர் கருத்து கூறியிருக்கிறார். நேரம் சரியில்லை என்பதால், ஜோதிடர் ஆலோசனைப்படி, மஞ்சள் சட்டை அணிய தொடங்கியுள்ளார்,’’ என்பது போன்ற விவரங்கள், நமக்கு கிடைத்த ஒன்இந்தியா, என்டிடிவி, பாலிமர் உள்ளிட்ட செய்தி ஆதாரங்கள் வழியே தெரியவருகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்தது பற்றி அவர் எதுவும் கூறியதாக, எங்கேயும் செய்தி வெளியாகவில்லை. இதுதவிர, ராஜேந்திர பாலாஜி, பாஜக ஆதரவு மனப்பான்மையில் உள்ள நபர் என்று முழுதாகக் கூறவும் முடியாது.
ஆம், சென்ற காலத்தில் கடுமையாக, பாஜகவை அவர் விமர்சித்திருக்கிறார். இன்றளவும் மத்தியில் பாஜகவை அவர் ஆதரித்தால், மாநில அளவில் அதிமுகவையே முன்னிலைப்படுத்தி பேசும் வழக்கத்தை ராஜேந்திர பாலாஜி பின்பற்றுவதைக் காண முடியும்.

மேலும், அவர் அவ்வப்போது ஊடகங்களில் எதாவது சர்ச்சைக்குரிய கருத்தை கூறுகிறார் என்பதால், ஊடகங்களில் பேச அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாடு விதித்தார் என்பதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பாஜகவில் இருப்பதைவிட அதிமுகவில் இருந்தபடி இந்து மதத்தை பின்பற்றுபவராக தன்னைக் காட்டிக் கொள்ளவே அவர் அதிகம் விரும்புகிறார். அதைத்தான் அவரது கடந்தகால செயல்பாடுகள் நமக்குக் காட்டுகின்றன.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,
1) ராஜேந்திர பாலாஜி, அதிமுகவில் இருந்து விலகுவேன் என்று சொன்னது தொடர்பான எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை.
2) இது தவறான தகவல் என்று சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் பதிவிலேயே, சிலர் கமெண்ட் பகிர்ந்திருக்கின்றனர்.
3) அதிமுகவின் 2021 சட்டமன்ற தேர்தல் முதல்வர் வேட்பாளர் யார் என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ள ராஜேந்திர பாலாஜி, விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி அக்கட்சியில் இருந்து விலகுவேன் என்று சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே.
4) ‘தற்சமயம் அமைச்சர் பதவியில் உள்ள சூழலில், அவர் இப்படி ஒரு முடிவெடுக்க வாய்ப்பே இல்லை, ஒருவேளை அவர் சொல்லியிருந்தால், விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் இந்த விசயம் பெரிய விவாதமாக மாறியிருக்கும். அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதில் இருந்தே இது வதந்தி எனத் தெளிவாகிறது,’ என்று அவரது நெருங்கிய வட்டாரத்தினர் குறிப்பிடுகிறார்கள்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அதிமுகவில் இருந்து விலகுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
