
இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவில் காகங்களின் படையெடுப்பு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

காகம் போன்ற பறவை கூட்டமாக பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. என்ன பேசுகிறார்கள் என்று சரியாக கேட்கவில்லை. நிலைத் தகவலில், “சவூதியில் காக்கைகளின் படையெடுப்பு! என்ன நடக்குது இந்த பூமியில்” என்று குறிப்பிட்டுள்ளனர்
இந்த வீடியோ பதிவை Muthu Kutti Nadar என்பவர் 2020 மே 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. நிலைத் தகவலில் இந்த சம்பவம் சௌதி அரேபியாவில் நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகள் பறந்து வந்து பயிர்களை நாசம் செய்யும் நிலையில், சௌதி அரேபியாவில் காகம் படையெடுப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிசர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். சரியான தகவல் கிடைக்கவில்லை. வீடியோவில் ஹெச் மார்ட் என்று கடை பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, h mart என்று டைப் செய்யும்போதே h mart crows பற்றித் தேடுகின்றீர்களா என்று காட்டியது. அதை கிளிக் செய்து பார்த்த போது அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தகவல் நமக்கு கிடைத்தது.

இதனுடன் பல ஃபேக்ட்செக் ஊடகங்கள் இது தொடர்பாக வேறு மொழிகளில் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியிருப்பதும் தெரிந்தது. அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, டெக்சாஸ் நகரில் காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்தது தொடர்பான செய்தி மற்றும் வீடியோவை எடுத்து ஆய்வு செய்தோம். அந்த வீடியோக்கள் சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில் இந்த சம்பவம் டெக்சாஸில் (Carrollton, Texas, USA) 2016ம் ஆண்டு நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த பறவை காகம் இல்லை, இவற்றின் பெயர் கிராக்கிள் (Grackles) என்றும் தெரிந்தது. இந்த பறவையும் பார்க்க காகம் போல் கருப்பாக இருந்தாலும், இது காகம் இல்லை என்பது தெரிந்தது.

எச் மார்ட் என்ற சூப்பர் மார்க்கெட் சௌதி அரேபியாவில் உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அப்போது அது அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் என்று தெரிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ளது போன்று டெக்சாஸில் எச் மார்ட் சூப்பர் மார்க்கெட் உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அந்த கடை நமக்கு கிடைத்தது. நமக்கு கிடைத்த யூடியூப் வீடியோ தெளிவாக இருந்ததால் கடை எண்ணை நம்மால் தெளிவாக காண முடிந்தது.
அதன் அடிப்படையில் கூகுள் ஸ்ட்ரீட் வீயூவில் தேடியபோது அதே 2625 எச் மார்ட் சூப்பர் மார்க்கெட்டை காண முடிந்தது. எனவே, இந்த சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்தது என்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோ டெக்சாஸில் எடுக்கப்பட்டதாக வெளியான பதிவுகள் கிடைத்துள்ளன.
டெக்சாஸில் உள்ள எச் மார்ட் கடையின் தோற்றம், வரிசை எண் அப்படியே ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போல் இருப்பது தெளிவாகி உள்ளது.
இதன் அடிப்படையில், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவுடன் சௌதி அரேபியாவில் காகங்கள் படையெடுப்பு தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வெட்டுக்கிளியை தொடர்ந்து சவூதியில் காகங்களின் படையெடுப்பா?
Fact Check By: Chendur PandianResult: False
