மது பாட்டில் கடத்திய பெண் பா.ஜ.க மகளிர் அணி செயலாளரா?- சர்ச்சை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம் தமிழகம்

பா.ஜ.க மகளிர் அணி செயலாளர் அனுசுயா என்பவர் புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு மது பாட்டில் கடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின் அருகே அமர்ந்திருக்கிறார். அவர் முன்பாக இரண்டு பைகளில் மது பாட்டில்கள் உள்ளன. நிலைத் தகவலில், “பாஜக கட்சியின் மகளிர் அணி செயலாளர் அனுசுயா பாண்டிசேரில இருந்து கடலூருக்கு “புரட்சிப்பயணம்” மேற்கொண்டபோது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Natpudan Nowshath என்பவர் 2020 ஜனவரி 31ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு மது பாட்டில் கடத்திய பா.ஜ.க மகளிர் அணி செயலாளர் அனுசுயா என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் தமிழக நிர்வாகியா அல்லது புதுச்சேரி நிர்வாகியா… கைது செய்யப்பட்ட இடம் தமிழகமா அல்லது புதுச்சேரியா என்று எந்த ஒரு தகவலும் இதில் குறிப்பிடவில்லை. பா.ஜ.க மகளிர் அணி செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளனர். அவர் மாநில அளவிலான நிர்வாகியா, மாவட்ட அளவிலான நிர்வாகியா என எந்த தகவலும் இல்லை. ஏதோ ஒரு புகைப்படத்தை எடுத்து தங்களுக்கு பிடிக்காத கட்சியின் நிர்வாகி என்று பதிவிட்டது போல இருந்தது.

எனவே, இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்துடன் கூடிய செய்தியை பல செய்தி ஊடகங்கள் வெளியிட்டது தெரிந்தது.

dinamalar.comArchived Link 1
tamil.asianetnews.comArchived Link 2

2018 ஜனவரி 23ம் தேதி வெளியான தினமலர் செய்தியில் புகைப்படம் இல்லை. ஆனால், மது பாட்டிலுடன் அனுசுயா என்ற பெண் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தனர். ஏஷியா நெட் வெளியிட்டிருந்த செய்தியில் இந்த புகைப்படம் இருந்தது. ஆனால், இவர் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்று குறிப்பிடவில்லை.

Archived Link

தொடர்ந்து தேடியபோது இதே படத்துடன் கூடிய நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த நிர்வாகி என்று ஒருவர் ட்வீட் செய்திருந்தது நமக்கு தெரிந்தது. இன்னும் சில பதிவுகளில் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தனர். 

Facebook LinkArchived Link

இப்படி ஆளாளுக்கு தங்களுக்குப் பிடிக்காத கட்சியைச் சேர்ந்தவர் என்று இந்த பெண் படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டு வருவதைக் காண முடிந்தது. எனவே, உண்மையில் இந்த பெண் யார், எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்று கண்டறிய முடிவு செய்தோம். தினமலர் உள்ளிட்ட செய்திகளில் கடலூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால், கடலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசி, மதுவிலக்குப் பிரிவு எண்ணை வாங்கினோம். 

அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இரண்டு வருடங்களுக்கு முந்தைய சம்பவம் என்று கூறுகின்றீர்கள். எனவே, அது பற்றித் தேடித்தான் எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் பல காவல் நிலையங்கள் உள்ளன. எங்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று பார்க்க வேண்டும். எனவே, சரி பார்த்துவிட்டு சொல்கிறோம்” என்றனர்.

பிறகு நம்மைத் தொடர்புகொண்டு பேசிய அவர்கள், “2018 ஜனவரியில் மது பாட்டில் கடத்திய வழக்கில் அனுசுயா என்ற பெண் கைது செய்யப்பட்டது உண்மைதான். மது கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் சார்ந்த கட்சி பற்றி எந்த தகவலும் இல்லை” என்றனர். (இந்த உரையாடல் நம்முடைய ஆதாரத்துக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.)

நம்முடைய ஆய்வில்,

2018ம் ஆண்டு மது பாட்டில் கடத்தியது தொடர்பாக அனுசுயா என்பவர் கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த செய்திகள் எதிலும் அவர் எந்த ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்று குறிப்பிடவில்லை.

இவர் பா.ஜ.க, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர் என்று பலரும் வதந்தி பரப்பி வருவது தெரியவந்துள்ளது.

இந்த பெண் எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவர் என்றோ, பா.ஜ.க நிர்வாகி என்றோ எங்கள் ஆவணங்களில் குறிப்பிடவில்லை என்று கடலூர் மதுவிலக்கு போலீசார் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மது பாட்டில் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணின் படத்தை எடுத்து, பா.ஜ.க மகளிர் அணி செயலாளர் என்று தவறான தகவல் சேர்த்து வெளியிட்டது உறுதியாகியுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மது பாட்டில் கடத்திய பெண் பா.ஜ.க மகளிர் அணி செயலாளரா?- சர்ச்சை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False