
‘’முகமது அலி ஜின்னா சிறையில் வாடும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்படும் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதில், நெல்சன் மண்டேலாவின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இருபத்தியேழு ஆண்டுகள் இவர் தனிமைச் சிறையில் வாடியபோது, நம்மால் 21 நாட்கள் வீட்டில் இருக்க முடியாதா,’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், இந்த புகைப்படத்தின் தலைப்பில் ‘’மொஹம்மட் அலி ஜின்னா’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இதில் இருப்பவர் ஜின்னா என நினைத்து பலரும் ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
அன்றாட செய்திகளை படிப்பவர்களுக்கு இதில் இருப்பவர் நெல்சன் மண்டேலா என எளிதாக தெரிந்துவிடும். மேலும், முகமது அலி ஜின்னா எப்படியிருப்பார் என்பதும் பலருக்கு தெரியும்.
எனினும், ஒரு சின்ன விளக்கத்திற்காக, மேற்கண்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நெல்சன் மண்டேலா தொடர்பான புகைப்படங்கள் கிடைத்தன.
அதேசமயம், முகமது அலி ஜின்னா எப்படியிருப்பார் என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
ஒரு முன்னணி ஊடகம் நெல்சன் மண்டேலாவுக்கும், முகமது அலி ஜின்னாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் இப்படி ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பதற்றம் நிறைந்த சூழலில், இந்த தவறான தகவலால், ஃபேஸ்புக் வாசகர்கள் உண்மை தெரியாமல் குழம்ப நேரிடுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் பற்றிய தகவல் தவறு என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
