
திருத்தணியில், கொடைக்கானலில் பனிமழை பெய்தது என்று ஒரே வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையில் எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
3.18 நிமிடம் ஓடக்கூடிய ஆலங்கட்டி மழை பொழியும் வீடியோவை Manickam Mahimairaj என்பவர் ஏப்ரல் 8, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கொடைக்கானலில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 9ம் தேதி இதே வீடியோவை Tamilvalavan Kutty என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆந்திர எல்லையில் பனிக்கட்டி மழை பெய்தது என்று நிலைத்தகவலில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு வீடியோக்களையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் உள்ள இடம் கொடைக்கானல் போல தெரியவில்லை. வீடியோவில் உள்ளவர்கள் பேசுவதும் தமிழ் இல்லை. என்ன மொழி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. எனவே, வெளிநாட்டில் அல்லது வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டில் எடுத்ததாக பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பிறகு இந்த வீடியோ யூடியூபில் கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி பதிவேற்றப்பட்டிருக்கும் தகவல் தெரிந்தது. அதில் ஆங்கில எழுத்தில் எழுதியிருந்தாலும், அது ஆங்கிலமில்லை. எனவே, அதை அப்படியே காப்பி செய்து கூகுள் டிரான்ஸ்லேட்டரில் மொழி பெயர்த்தோம். அது வியட்நாமிஸ் மொழி என்பது தெரிந்தது. விடுமுறை காலையில் ஆலங்கட்டி மழை என்று இருந்தது. மேலும் குவான் நின், லாங் மகன், பேக் கியாங் என சில வார்த்தைகள் இருந்தன. இவை எல்லாம் என்ன என்று தேடினோம். அப்போது குவான் நின் என்பது வியட்நாமின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணம் என்பது தெரிந்தது.
தொடர்ந்து வியட்னாமிஸ் மொழியில் இந்த வீடியோவை பலரும் பதிவேற்றம் செய்திருப்பதைக் காண முடிந்தது. அதில் ஒன்றை மொழி பெயர்த்து பார்த்தபோது, வியட்நாமில் சீன புத்தாண்டன்று ஆலங்கட்டி மழை பொழிந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த வீடியோவும் ஜனவரி 26ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
வியட்நாம், ஆலங்கட்டி மழை, குவான் நின் ஆகிய வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது வியட்நாமின் வடக்கு மாகாணமான குவான் நின்-ல் சீன புத்தாண்டு தினத்தன்று ஆலங்கட்டி மழை பொழிந்ததால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்தன.
யூடியூப் வீடியோவில் இருந்த வியட்நாமிஸ் மொழி தலைப்பை காப்பி பேஸ்ட் செய்து தேடியபோது, ஆலங்கட்டி மழை தொடர்பான பல செய்திகள் கிடைத்தன. 2020ம் ஆண்டின் சீன புத்தாண்டு எப்போது என்று தேடியபோது ஜனவரி 25 என்றும் தெரியவந்தது.
இதன் மூலம், வியட்நாமில் எடுக்கப்பட்ட வீடியோவை கொடைக்கானலில் எடுக்கப்பட்டது என்றும் திருத்தணியில் எடுக்கப்பட்டது என்றும் ஆளாளுக்கு பதிவிட்டு வருவது உறுதியானது.
நம்முடைய ஆய்வில்,
ஆலங்கட்டி மழை வீடியோ 2020 ஜனவரி மாதம் வியட்நாமில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியான காலத்தில் வியட்நாமின் வடக்கு மாகாணத்தில் ஆலங்கட்டி மழை பொழிந்தது என்பதற்கான செய்திகள் கிடைத்துள்ளன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வியட்நாம் வீடியோவை எடுத்து தமிழகத்தில் ஆலங்கட்டி மழை பொழிந்ததாகப் பகிரப்பட்டு வரும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆலங்கட்டி மழை பெய்தது திருத்தணியா… கொடைக்கானலா?– ஃபேஸ்புக் வீடியோவால் குழப்பம்
Fact Check By: Chendur PandianResult: False
