
சூர்யாவால், அத்தி வரதர் போல் 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்க முடியுமா என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கேட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஒன்றின் கீழ் ஒன்றாக தமிழிசை மற்றும் நடிகர் ரஜினிகாந்த் படங்களை வைத்துள்ளனர். தமிழிசை படத்துக்கு மேல், “சூரியாவால் அத்திவரதரை போல் 40 வருடம் தண்ணீரில் இருக்க முடியுமா? – தமிழிசை” என்றும் ரஜினிகாந்த் படத்துக்கு கீழ் “நாந்தான மெண்டல் ஆனா இந்த அக்கா எனக்கே டஃப் குடுக்குது” என்று ரஜினி கிண்டலாக கூறுவது போலவும் போட்டோ எடிட் செய்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூலை 22ம் தேதி பகிர்ந்துள்ளனர். இதை ஏராளமானோர் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் சூர்யா தன்னுடைய அகரம் அறக்கட்டளை விழாவில் புதிய கல்விக் கொள்கை பற்றி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க மற்றும் தமிழக அ.தி.மு.க தலைவர்கள் சூர்யாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
சூர்யாவின் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மிக்க கடும் கண்டனங்களை முன் வைத்தார். புதிய கல்விக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத சூர்யா என்று எல்லாம் விமர்சித்திருந்தார் தமிழிசை. இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ் வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்தநிலையில், அத்தி வரதருடன் சூர்யாவை ஒப்பிட்டு தமிழிசை பேசியது போன்று பல மீம்ஸ், தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு நடத்தினோம்.
நடிகர் சூர்யா, அத்தி வரதர் போல் 40 ஆண்டுகள் தண்ணீரில் இருக்க முடியுமா என்று தமிழிசை கேட்டது உண்மையா, அது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், சூர்யாவுக்கு தமிழிசையின் கண்டனம் தொடர்பான செய்திகள் கிடைத்தன. 40 ஆண்டுகள் தண்ணீரில் இருக்க முடியுமா என்று கேட்டதாக எந்த ஒரு செய்தி, வீடியோ நமக்குக் கிடைக்கவில்லை.
அத்தி வரதரை பார்க்க வரும் மக்களுக்கு இன்னும் சிறப்பான ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் சூர்யா பற்றியும் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதை ஆய்வு செய்தோம். அதில், சர்ச்சைக்குரிய வகையில் தமிழிசை எதையும் தெரிவிக்கவில்லை.
இதனால் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முடிவு செய்தோம். அவர் தரப்பில் அவரது உதவியாளர் நம்மிடம் பேசினார். சமூக ஊடகங்களில் பரவும் தகவல், மேற்கண்ட ஃபேஸ்புக் படம் உள்ளிட்டவை பற்றி அவரிடம் கூறி விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், “தமிழிசை அவர்கள் இப்படி எந்த இடத்திலும் பேசவில்லை. இது முற்றிலும் தவறான தகவல்… வெறும் வதந்தி” என்றார்.
தமிழிசை பேசியது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை, தமிழிசை பேசியதாக பகிரப்படும் தகவல் பொய்யானது என்று தமிழிசையின் உதவியாளர் நம்மிடம் தெரிவித்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“சூர்யாவால் 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்க முடியுமா?” – தமிழிசை கேட்டதாக பரவும் ஃபேஸ்புக் செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False
