
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், எம்.பி-ஆன பிறகு “டெல்லியில் இருந்துகொண்டே தென் மாவட்டங்களைத் தீப்பிடிக்க வைப்பேன்” என்று பேசியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link I News Link I Archived Link
கதிர்நியூஸ் என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியை Youtube Komaali ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. அதில், ““டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களைத் தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையைத் தூண்டும் திருமாவளவன்!!” என்று தலைப்பிட்டிருந்தனர்.
Youtube Komaali ஃபேஸ்புக் பக்கம் இந்த செய்தியை 2019 ஜூலை 19ம் தேதி பகிர்ந்திருந்தது.
உண்மை அறிவோம்:
கதிர்நியூஸ் இணையதளம் வெளியிட்ட “டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்” என்ற செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், வன்முறையையே தூண்டும் வகையில் எப்படி எல்லாம் திருமாவளவன் பேசினார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
கதிர் செய்தியில் திருமாவளவன் எங்கே, எப்போது இப்படி பேசினார் என்று குறிப்பிடவில்லை. ஆனால், எம்.பி-யான பிறகு பேசியதாக குறிப்பிட்டிருந்தனர். ஆதாரமாக நியூஸ்ஜெ வெளியிட்ட வீடியோ இணைப்பை வைத்திருந்தனர்.
அந்த வீடியோவை ஆய்வு செய்தோம், அதிலும் இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது குற்றம்சாட்டும் வகையில் அந்த செய்தி இருந்தது.
நியூஸ்ஜெ வெளியிட்ட செய்தி I Archived Link
இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். கூகுளில் தேடியபோது பல இடங்களில் பேசிய வீடியோ கிடைத்தது. அதில், குறிப்பிட்ட இந்த வீடியோ எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், இது 7-8 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டபோது அதை கண்டித்துப் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ. முழு பேச்சையும் வெளியிடாமல், அநாகரீகமான முறையில் சிறிய பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளனர்” என்று கூறி, ஒரு வீடியோ லிங்கை நமக்கு அளித்தார்.
2019 ஜூலை 20ம் தேதி வழக்கறிஞர் பி.செல்வம் என்பவர் அந்த வீடியோவை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் உடைக்கப்பட்ட சிலைகளை முதலில் திருமாவளவன் பார்வையிடுகிறார். பின்னர், கண்டனம் தெரிவித்து பேசுகிறார். அந்த வீடியோ பேச்சு முழுவதும் கேட்டோம். இவர்கள் குறிப்பிடும் பகுதி சரியாக 4வது நிமிடம் தொடங்குகிறது.
அப்போது அவர், “வன்முறையை செய்யத் தலைவன் தேவையில்லை ரவுடி போதும். பேருந்து மீது கல் எறிந்தால் வன்முறை வந்துவிடும்… காவல் துறை மீது கல் எறிந்தால் வன்முறை வந்துவிடும். உலகத்திலேயே சிறந்த வன்முறையாளர்கள் யார் என்றால் காவல் துறையினர்தான்.
திருமாவளவன் டெல்லியில் இருந்துகொண்டே தென்மாவட்டத்தைத் தீப்பிடிக்க வைக்க முடியும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வைக்க முடியும். பேருந்துகள் ஓடாது… வண்டி வாகனங்கள் ஓடாது… விமானங்கள் பறக்காது… ரயில்கள் ஓடாது… அந்த நிலையை உருவாக்க முடியும். ஆனால் திருமாவளவன் ரவுடி அல்ல… திருமாவளவன் புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசு. திருமாவளவன் ரவுடி அல்ல… புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளைப் படித்தவன். நாகரீகத்தை உணர்ந்தவன். ஆகவே எதிர்ப்பை எப்படித் தெரிவிக்க வேண்டுமோ அப்படித் தெரிவிப்பவர்கள்தான் விடுதலைச் சிறுத்தைகள்” என்று சொல்கிறார்.
தொடர்ந்து பல விஷயங்களை பேசுகிறார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று குறிப்பிடுகிறார். நான் வன்முறை செய்பவன் இல்லை என்று முதலமைச்சர் அம்மையாருக்குத் தெரியும். அதனால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறியபோது தம்பி எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார் என்று கூறுகிறார்.
குறிப்பிட்ட இந்த பகுதி பேச்சை மட்டும் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மற்றொரு இடத்தில் பெருங்குடி, சின்ன உடைப்பு ஆகிய இடங்களில் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதாகக் கூறுகிறார். இந்த வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது 2012ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன.
தினகரன் செய்தி I Archived Link
தினமலர் செய்தி I Archived Link
இதன் மூலம் இந்த வீடியோ பதிவேற்றம் செய்தது தற்போதாக இருந்தாலும் 2012ம் ஆண்டு இந்த கூட்டம் நடந்தது உறுதியாகிறது.
ஆனால், உண்மையை ஆராயாமல் திருமாவளவன் பேச்சை முழுமையாக வெளியிடாமல் தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, சமீபத்தில் எம்.பி ஆன பிறகு திருமாவளவன் பேசினார் என்று அவதூறு பரப்பியுள்ளனர். திருமாவளவனுக்கு எதிராக பொய்யான செய்தியை வெளியிட்டே தீர வேண்டும் என்ற ஆர்வத்தில் நியூஸ்ஜெ மற்றும் கதிர்செய்திகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
நம்முடைய ஆய்வில்,
இந்த தகவலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறுத்துள்ளனர்.
திருமாவளவன் பேசிய முழு வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.
இந்த வீடியோ 2012ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் திருமாவளவன் பேசவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், வீடியோவின் குறிப்பிட்ட பகுதி மட்டும் எடிட் செய்யப்பட்டு தவறான அர்த்தம் வரும் வகையில் விஷமத்தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டெல்லியில் இருந்துகொண்டே தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்: திருமாவளவன் வீடியோவின் உண்மை!
Fact Check By: Chendur PandianResult: False
