
‘’ரஷ்ய அதிபர் புதின் மகள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம்.
தகவலின் விவரம்:
இந்த புகைப்பட பதிவில் சிறுமி ஒருவர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதைக் காண முடிகிறது. அதன் மேலே, ‘’ இவர்தான் ரஸ்ய அதிபர் புதின் மகள். உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை முதலில் தன் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சோதித்து பின் பொது மக்களுக்கு அளிக்க உள்ளார் ரஸ்ய அதிபர் புதின். ஆனால் நம் நாட்டிலோ சிலர் மக்களை காவு கொடுத்து தன் சகாக்களை வளமாக்கி உலக பணக்கார வரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வர அரும்பாடு படுகின்றனர்.,’’ என்று எழுதியுள்ளனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
உலகம் முழுக்க அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது. அந்நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாகவும், இதனை ரஷ்ய அதிபர் புதின் மகள் மீது பரிசோதித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த பரபரப்பிற்கு இடையில்தான், மேற்கண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக தொடங்கியுள்ளது. இதில் இருப்பவர் உண்மையில் புதின் மகளா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.
ஆம், இந்த சிறுமி புதின் மகள் என்று கூறி வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பல ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டு வந்த நிலையில், சில ஊடகங்கள் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இதன்படி, ரஷ்ய அதிபர் புதின் இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பாகவே, அந்நாட்டு ராணுவம் தரப்பில் சில தன்னார்வலர்களை வைத்து, கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்து வந்தது. அந்த செய்தி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தில் உள்ள இளம்பெண்தான் இதில் உள்ளவர். இவர் ரஷ்ய அதிபரின் மகள் கிடையாது; சிறுமியும் அல்ல.
புதினுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மூலமாக, 2 மகள்களும், 2வது மனைவி மூலமாக, ஒரு குழந்தையும் உள்ளனர். அவர்களை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவரின் புகைப்படங்களை வைத்து, புதின் மகள் என்று கூறி வதந்தி பரப்பி வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் பற்றிய தகவல் தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்தால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
