மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட உடனடி பாலம் அமைக்கும் ராணுவ வாகனம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

ராணுவ டேங்க் போன்ற வாகனங்கள் ஆற்றுக்குள் சென்று பாலம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றின் மீது ராணுவ வாகனங்கள் பயணிக்கின்றன. எந்த இடத்திலும் இந்திய ராணுவத் தளவாடம் என்பதற்கான அடையாளம் இல்லை. நிலைத் தகவலில் "மோடி அரசின் மேக் இன் இந்தியா... வெற்றிநடை போடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Natarajalingam Suambulingam என்பவர் 2020 மே 27ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா – சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில் பலரும் தங்கள் மனதுக்கு வந்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்தியாவிடம் இது போன்ற ராணுவ தளவாடங்கள் உள்ளன. ஆனால், இது இந்தியாவில், மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோவைப் பார்க்கும்போது 2.10வது நிமிடத்தில் ராணுவ வீரர்கள் சிலர் டாங்கிகளில் வருவதைக் காண முடிகிறது. அதில் உள்ள வீரர்கள் யாரும் இந்தியர்கள் போல இல்லை. ஐரோப்பிய வீரர்கள் போல உள்ளனர். எனவே, நிச்சயம் இது இந்திய ராணுவத்தின் தற்காலிக மிதக்கும் பாலம் அமைக்கும் வீடியோ இல்லை என்பது தெரிந்தது.

இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய கூகுளில், ராணுவம் மிதக்கும் பாலம் அமைக்கும் வீடியோ என்று பொதுவாக டைப் செய்து தேடினோம். அப்போது போலந்து ராணுவம் ராணுவ பயிற்சியின்போது மிதக்கும் பாலம் அமைத்ததாக சில வீடியோக்கள் கிடைத்தன.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோதான், ஆனால் உறுதியான தகவல் இல்லாமல் இருந்தது. எனவே. தொடர்ந்து தேடினோம். ஒரு சில வீடியோவில் லித்துவேனியாவில் போலந்து ராணுவம் நடத்திய ஒத்திகை என்று குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, மீண்டும் கூகுளில் போலந்து ராணுவம் ஆற்றில் அமைத்த மிதக்கும் பாலம் என்று டைப் செய்து தேடினோம். அப்போது AiirSource Military என்ற ராணுவம் தொடர்பான வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ கிடைத்தது. 2017ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி இந்த வீடியோவை அவர்கள் பதிவேற்றம் செய்திருந்தனர். அதில் தெளிவாக நேட்டோ பயிற்சியில் போலந்து ராணுவக் குழு மிதக்கும் பாலம் அமைத்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

Youtube Link

உலக நாடுகள் அச்சப்படும் அளவுக்கு இந்திய ராணுவத்தில் பல அதிநவீன சாதனங்கள் உள்ளன. அவற்றின் படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அதைவிடுத்து வெளிநாட்டு வீடியோவை வைத்து புகழ்தேடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் போலந்து படையின் பயிற்சி வீடியோவை எடுத்து மோடியின் மேக் இன் இந்தியா என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது?

Fact Check By: Chendur Pandian

Result: False