
‘’வி.பி.துரைசாமி எனக்கு உணவு வாங்கித் தரவில்லை,’’ என்று கூறி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ட்வீட் வெளியிட்டதாக பகிரப்படும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவில், கி.வீரமணி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் போன்ற ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இது பார்க்க உண்மையானதைப் போன்று உள்ளதால், பலர் குழப்பமடைந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். இந்த விசயம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக, திமுகவில் இருந்து விலகினால், அதிமுக போன்ற கட்சிகளில்தான் இணைவார்கள். ஆனால், தற்போது பாஜகவில் இணையும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டதாக, அரசியல் விமர்சகர்கள் கூட விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. வி.பி.துரைசாமி, திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த நிகழ்வு, மே 21, மே 22 ஆகிய தேதிகளில் நடந்ததாகும். அன்றைய நாட்களில் வீரமணி அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் (@AsiriyarKV) ஏதேனும் ட்வீட் வெளியிட்டுள்ளாரா என விவரம் தேடினோம்.
அப்படி எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அவரது பெயரை பயன்படுத்தி சிலர் ஃபோட்டோஷாப் செய்துள்ளதாக தெரியவருகிறது.

கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றவர்களை, ஓசி சோறு என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட சுப.வீரபாண்டியன் பற்றி இதுபோன்ற வதந்தி ஒன்று பகிரப்பட்டிருந்தது. அதனைக் கூட நாம் ஆய்வு செய்து, இது தவறான தகவல் என நிரூபித்திருந்தோம். அதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த வரிசையில் பகிரப்பட்ட மற்றும் ஒரு வதந்திதான் மேலே உள்ள தகவலும்…
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். இதுபோன்ற செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாரும் கண்டால் எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:வி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்!
Fact Check By: Pankaj IyerResult: False
