
‘’திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் இவர்தான்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பவர் உண்மையிலேயே ஞானசேகரனா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
மாணிக்கம் என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ஞானசேகரன் என்று கூறி வெற்றிவேல் புகைப்படத்தை இணைத்துள்ளார். அதன் மேலே, ‘’அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்,’’ என்று கூறியுள்ளார்.
உண்மை அறிவோம்:
இவர் கூறுவது போல, முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் அமமுக.,வில் இருந்து விலகி, திமுக.,வில் இணைந்தது உண்மைதான். அதுபற்றிய விரிவான தகவலை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
செய்தியை உண்மையாக பதிவிட்ட இந்த நபர் ஞானசேகரனுக்குப் பதிலாக, வெற்றிவேல் புகைப்படத்தை இணைத்து, பகிர்ந்துள்ளார். இதுதான் குழப்பத்திற்கு காரணம். அமமுக நிர்வாகியாக உள்ள வெற்றிவேல் புகைப்படத்தை பதிவிட்டதற்கு ஏதேனும் காரணத்தை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதுதவிர, அமமுக பொதுச் செயலாளராக உள்ள டிடிவி தினகரன் புகைப்படத்தை பகிர்ந்திருந்தால் கூட இந்த இடத்தில் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஞானசேகரன் என்று கூறிவிட்டு, வெற்றிவேல் புகைப்படத்தை பகிர்ந்தது என்ன காரணம் என்று தெரியவில்லை.
இதன்படி, வெற்றிவேல் என்பவர் வேறு, ஞானசேகரன் என்பவர் வேறு என தெளிவாகிறது. அவர்களின் உண்மை புகைப்படத்தை ஒரு ஒப்பீட்டிற்காக கீழே இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ளது, ஞானசேகரனின் உண்மை புகைப்படம் இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக முடிவு செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ மற்றும் செய்தியை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திமுகவில் இணைந்த ஞானசேகரனின் புகைப்படம்: ஃபேஸ்புக் தகவலால் குழப்பம்
Fact Check By: Pankaj IyerResult: False
