
சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா என்று ஒருவருடைய புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. படத்தில் இருப்பது சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா தானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

“தமிழ் மொழி வளர்த்த சுப்பிரமணிய சிவா நினைவு நாள்” என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், தாடியுடன் பிறை நட்சத்திரம் போல நெற்றில் நாமமிட்ட ஒருவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தில், “நாட்டின் விடுதலைக்கு தமிழின் எழுச்சிக்காகவும் கடுமையாக போராடினார். 19 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்” என்று குறிப்பிட்டிருந்தனர். படத்துக்குக் கீழ் சுப்பிரமணிய சிவா என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த பதிவை ஆம் நாங்கள் தமிழர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 23ம் தேதி வௌயிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பலரும் கலந்துகொண்டனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக தொழுநோயாளி கைதிகள் இருந்த அறையில் தங்க வைக்கப்பட்டு, தொழுநோய் பாதிப்புக்கு ஆளானவர் என்று கூறப்படுபவர் சுப்பிரமணிய சிவா. விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவரைப் பற்றி மேலும் அதிகமாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
1925ம் ஆண்டு மறைந்த சுப்பிரமணிய சிவாவின் உண்மை புகைப்படங்கள் ஒரு சில மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. அந்த படங்களில் எல்லாம் அவர் தலைப்பாகை கட்டியபடியே இருக்கிறார். சுப்பிரமணிய சிவா என்றாலே, நீண்ட தாடி, கையில் உலக்கை போன்ற கைத்தடி, தலையில் தலைப்பாகையே நினைவுக்கு வரும். சுப்பிரமணிய சிவாவின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகையில், “வேட்டி, ஜிப்பா, தலைப்பாகை, கைத்தடி போன்றவையே அவருடைய சொத்தாக இருந்தன” என்று விகடன் வெளியிட்ட கட்டுரை நமக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம், சுப்பிரமணிய சிவா எப்போதும் தலைப்பாகை கட்டியவராகவே காட்சி அளிப்பார் என்பது தெரிகிறது. நமக்குக் கிடைத்துள்ள அவருடைய படங்கள் எல்லாம் தலைப்பாகை கட்டியபடியே இருப்பதைக் காண முடிந்தது.
கூகுளில், சுப்பிரமணிய சிவா என்று டைப் செய்து தேடியபோது, மேற்கண்ட பதிவில் உள்ள படத்தையே கூகுள் ப்ரொபைலிலும் காண முடிந்தது. இதனால், படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

நம்முடைய தேடலில், படத்தில் இருப்பவர் சுதந்திர போராட்ட வீரர் வ.வே.சுப்பிரமணியம் என்பது தெரிந்தது. இவரும் தமிழ் ஆர்வலர்தான். இவரது முழு பெயர் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர். இவரும் தமிழ் இலக்கியத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார். இதனால், தமிழ் சிறுகதை தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
விக்கிப்பீடியாவில் வ.வே.சுப்பிரமணியத்தின் தோற்றம் பற்றி கூறுகையில், “வ.வே.சு கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் கருப்பு தாடி; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி…” என்று குறிப்பிடுகிறது. இவரைப் பற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வ.வே.சுப்பிரமணியம் ஐயரின் உருவ அமைப்பைப் பற்றிச் சொல்லும் பொது நெற்றியில் பிறைச்சந்திரக் குறி திலகம் வைப்பார் என்று உள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவைப் பார்க்கும்போது அந்த படத்தில் உள்ளவரும் பிறைச் சந்திர திலகம் வைத்திருப்பதைக் காண முடிகிறது. இருவரது பெயரிலும் சுப்பிரமணியம் இருப்பதால் குழப்பத்தில் படத்தை மாற்றி பலரும் பகிர்ந்து வருவது தெரிகிறது.

நம்முடைய ஆய்வில், விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்திலும் கூட சுப்பிரமணிய சிவா என்று கூறி வ.வே.சு படத்த பகிர்ந்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சுப்பிரமணிய சிவா பிறந்த தினத்துக்கு வ.வே.சு ஐயர் படத்தை வைத்து பகிர்ந்துள்னர். ஆனால், அவடைய நினைவுதினத்திற்கு வெளியிட்ட நியூஸ் கார்டில் சரியான படத்தை வைத்துள்ளனர்.
வாசகர் ஒருவர் இது தவறான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும், அந்த படம் அகற்றப்படவில்லை. விகடன் வெளியிட்ட அந்த படமே, சுப்பிரமணிய சிவாபற்றிய பல கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரிந்தது.

நம்முடைய ஆய்வில், மேற்கண்ட படத்தில் உள்ளவர் சுப்பிரமணிய சிவா இல்லை, வ.வே.சுப்பிரமணியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சுப்பிரமணிய சிவா என்று பகிரப்படும் மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சுப்பிரமணிய சிவாவா… வ.வெ.சுப்பிரமணியமா? – குழம்பிய ஃபேஸ்புக் பதிவர்கள்!
Fact Check By: Chendur PandianResult: False
