இயேசு ஒரு உருவக பாத்திரம் மட்டுமே: போப் பிரான்சிஸ் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம் | Social சர்வ தேசம்

கிறிஸ்தவர்கள் கடவுளாக வணங்கும் இயேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டுமே, உண்மையில் இயேசு இல்லை என்று போப் பிரான்சிஸ் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

POPE 2.png

Facebook Link I Archived Link

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக உள்ள போப் பிரான்சிஸ் புகைப்படத்துடன் வெளியான ஆங்கில செய்தியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த ஆங்கில செய்தியில், “இயேசு ஒரு உருவக கதாபாத்திரம்… உண்மை நபர் இல்லை – போப் பிரான்சிஸ் திருப்பலியில் தெரிவித்தார்” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தனர். அதை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ் உருவாக்கப்பட்டு இருந்தது.

படத்தின் மேல் பகுதியில், “இயேசு ஒரு உருவக பாத்திரமே – உண்மை நபர் அல்ல. அவரை பற்றிய எழுத்துக்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம் – போப் செய்தி” என்று குறிப்பிட்டு இருந்தனர். 

கீழ் பகுதியில், “உருவ வழிபாடு இல்லை என்று சிலுவையை வழிபட ஆரம்பித்து மேரி, ஏசு உருவம், ஃபோட்டோ, துவஜஸ்தம்பம், தேர் திருவிழா, பாதயாத்திரை, கொடியேற்றம்னு தறிகெட்டு அலைகிறது கிறிஸ்துவம்! இங்கு போப் ஒரே போடா போட்டுட்டாரு” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த பதிவை, Kannan Ramasamy என்பவர் 2019 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

போப் பிரான்சிஸ் பற்றி பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பெண் ஒருவரின் மார்பகத்தை முத்தமிட்டதாக ஒரு படம் வைரல் ஆனது. அந்த புகைப்படம் போலியானது என்று பின்னர் தெரிந்தது. இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

தற்போது கிறிஸ்தவர்களின் அடித்தளத்தையே அசைக்கும் வகையில், இயேசு என்று ஒருவர் இல்லை என்று போப் பிரான்சிஸ் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், போப் பிரான்சிஸ் கூறியதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மையை மட்டுமே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். 

ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள செய்தியில், மூன்று நாட்களுக்கு முன்பு வெளியானது போல் குறிப்பிட்டு இருந்தனர். ஆகஸ்ட் 10ம் தேதிக்குப் பிறகு போப் பிரான்சிஸ் இப்படி ஏதாவது பேசினாரா என்று தேடினோம். ஆனால் நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 

POPE 3.png

உலகின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக போப் பிரான்சிஸ் கருதப்படுகிறார். அவருடைய ஒவ்வொரு நிகழ்ச்சியும் வீடியோ எடுக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்திருந்தால் அடுத்த நிமிடமே அது உலகம் முழுவதும் பேசு பொருளாகிவிடுகிறது. ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்காதது ஆச்சரியத்தை தந்தது.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் ஆங்கிலத்தில் இருந்த, Pope Francis At Mass: ‘Jesus Is Metaphorical, Not Literal’ என்ற வார்த்தையை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, போப் பிரான்சிஸ் பெயரில் பரவும் செய்தி உண்மையா என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் சில செய்திகளும் நமக்கு கிடைத்தன. ஆனால், போப் கூறினார் என்பதை நிரூபிக்க தேவையான எந்த ஒரு உறுதியான செய்தியோ, வீடியோவோ நமக்கு கிடைக்கவில்லை.

அதேபோல், இந்த தகவல் சில ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பரவி வருவதும் தெரிந்தது. ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் பரவிய தகவல், தற்போது தமிழிலும் வந்திருப்பது புரிந்தது.

politifact.com என்ற இணையதளம் 2017ம் ஆண்டு வெளியிட்டிருந்த உண்மை கண்டறியும் படித்துப் பார்த்தோம். அதில், Yournewswire.com என்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டதாகவும் ஆனால், போப் பிரான்சிஸ் அவ்வாறு பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். 

Yournewswire.com வெளியிட்டிருந்த செய்தியில், போப் பிரான்சிஸ் இயேசு என்ற ஒருவர் இல்லை என்று பேசியதாகவும் அதனால், ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் ஒன்று கூடி போப் பிரான்சிஸ் சாத்தானின் வழிகாட்டுதலில் நடப்பதாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அந்த இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த செய்தி வெளியாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன… இன்றும் பிரான்சிஸ்தான் கத்தோலிக்க சபையின் தலைவராக இருக்கிறார். இதன் மூலமே, இந்த செய்தி பொய்யானது என்று தெரிந்துகொள்ள முடிகிறது.

தொடர்ந்து அந்த செய்தியைப் படித்தோம். அதில்,  Yournewswire.com இணையதளம் பொய்யான, கேலி கிண்டல் செய்தியை வெளியிடும் இணையதளம் என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும், இந்த இணையதளம் தொடர்ந்து பல பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக அதில் கூறியிருந்தனர்.  

போப் பிரான்சிஸ் தொடர்பான செய்திக்கு ஆதாரங்கள் இருந்தால் தரும்படி Yournewswire.com-ஐ தொடர்புகொண்டு கேட்டதாகவும் ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில் என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

Yournewswire.com இணையதளம் தற்போது உள்ளதா, என்ன செய்தியை எல்லாம் வெளியிட்டுள்ளார்கள் என்று தேடினோம். ஆனால், தற்போது அந்த இணையதளம் செயல்பாட்டில் இல்லை என்பது தெரிந்தது. அது பொய்யான செய்திகளை வெளியிடும் இணையதளம் என்பதற்கான பல ஆதாரங்கள், கட்டுரைகள் நமக்கு கிடைத்தன. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில்,

இயேசு என்பது வெறும் உருவகம், அப்படி ஒருவர் இல்லை என்று போப் பிரான்சிஸ் கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

2017ம் ஆண்டு இருந்தே இந்த வதந்தி சமூக ஊடகங்களில் பரவி வருவது நமக்குத் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், போப் பிரான்சிஸ் கூறியதாக பொய்யான வதந்தி பரவி வருவதாக வெளியான உண்மை கண்டறியும் ஆய்வுக் கட்டுரைகள் நமக்குக் கிடைத்துள்ளது.

போப் பிரான்சிஸ் பற்றிய செய்தியை வெளியிட்ட இணையதளம் பொய் செய்திகளை வெளியிடும் தளம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இயேசு என்று ஒருவர் இல்லை என்று போப் பிரான்சிஸ் கூறியதாக வெளியான தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இயேசு ஒரு உருவக பாத்திரம் மட்டுமே: போப் பிரான்சிஸ் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False