மோடியின் வாயில் ரத்தம் சொட்டும் அட்டைப் படம் வெளியிட்டதா டைம் இதழ்?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிரதமர் மோடியின் வாயில் இருந்து ரத்தம் சொட்டும் வகையில் டைம் இதழ் அட்டைப்படம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

டைம் இதழின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் வாயில் கோரைப் பற்கள் நீண்டு இருப்பது போலவும், அவரது வாயில் இருந்து ரத்தம் வடிவது போலவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “டைம்ஸ் இந்தியா பத்திரிகையின் சரியான அட்டைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Murugan Thirupathi Asari என்பவர் 2020 பிப்ரவரி 28 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது டைம் இதழ் வெளியிட்ட அட்டைப் படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில் டைம்ஸ் இந்தியா என்று குறிப்பிட்டுள்ளனர். டைம் என்பது அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இதழ் ஆகும். 

இது எடிட் செய்யப்பட்ட படம் என்பதை உறுதி செய்ய, 2019 மே மாதம் வெளியான டைம் இதழின் அட்டைப் படத்தைத் தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி, டைம் இதழின் பக்கத்தை கண்டறிந்தோம்.

Archived link

நமக்கு டைம் இதழின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான உண்மை அட்டைப் படம் மற்றும் டைம் இதழின் இணையதளத்தில் வெளியான அட்டைப்படத்துடன் கூடிய கட்டுரை கிடைத்தது. அதில், டைம் இதழுக்காக நைஜில் புக்கானன் (Nigel Buchanan) வரைந்த ஓவியம் என்று குறிப்பிட்டிருந்தனர். டைம்ஸ் இதழ் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டிருந்த படத்தில் மே 20, 2019 என்று பத்திரிகை வெளியான காலகட்டம் எல்லாம் தெளிவாக இருந்தது.

time.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

டைம் இதழ் வெளியிட்ட அசல் புகைப்படம் கிடைத்துள்ளது.

டைம் இதழ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படம் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மோடியின் வாயில் ரத்தம் சொட்டும்படியான ஓவியத்தை டைம்ஸ் இதழ் வெளியிட்டது என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடியின் வாயில் ரத்தம் சொட்டும் அட்டைப் படம் வெளியிட்டதா டைம் இதழ்?

Fact Check By: Chendur Pandian 

Result: False