
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்கள் மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது என்ன? ஆயுதக் குவியல்!
பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டதா?இல்லை! இல்லவே இல்லை!! பிறகென்ன? எப்படி? யாரிடம் கைப்பற்றியது? நேற்று புது தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர் அல்லவா? அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் காவல் துறை சோதனை செய்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்!!!
படிக்கின்ற மாணவர்கள் அறைகளில் பலவகை புத்தகக குவியல்கள் இருக்கும்.இருக்க வேண்டும்!!! ஆனால்,இங்கே இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? ஏன் எதற்காக?என்பது இனிமேல் விசாரணை நடத்தி கண்டு பிடிக்க வேண்டும்?! படிக்கிற மாணவர்களின் அறைகளில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் இந்திய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உணர்த்துகிறது?
இந்த இசுலாமிய பல்கலைக்கழகத்தில் இதையும் சொல்லிக் கொடுக்கிறார்களா?என்ற சந்தேகம் வருகிறதா?இல்லையா? காவல்துறை மீது ஒட்டு மொத்த பழி சுமத்தும் எதிர்கட்சிகள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது? மாணவர்கள் போராட்டத்தில் புகுந்த தீயசக்திகள் எந்த அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை எதிர்கட்சிகள் சொல்லியாக வேண்டும்?! இந்த குடியுரிமை சட்டம் ஊடுருவல் காரர்களை தடுக்கவே அன்றி வேறெதெற்காகவும் இல்லை!
அப்படி இருக்க, எதிர்கட்சிகள் அரசியல் உள் நோக்கோடு போராட்டங்களை தூண்டி விடும் காரணம் என்ன!? மாணவர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து ஜனநாயக வழிமுறைகளில் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்த வேண்டும்?! அதை விடுத்து முறையற்ற செயல்களில் வன்முறைகளைக் கையில் எடுத்தால் அதற்கான விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்?!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Rama Krishnan என்பவர் chanakya Channel | சாணக்யா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 17, 2019 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் உள்ள ஜாமியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடந்தது. போராட்டத்தில் வன்முறை ஏற்படவே, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அங்கிருந்த ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்தனர். பல்கலைக் கழகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த போலீசார் கண்ணில்பட்டவர்களை எல்லாம் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று பலரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பல்கலைக் கழக மாணவர்களே இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மிக பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக படங்களுடன் மிக நீண்ட பதிவை வெளியிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். இயந்திர துப்பாக்கிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
Search Link 1 | Search Link 2 |
samaa.tv | Archived Link 1 |
leadpakistan.com.pk | Archived Link 2 |
அப்போது இந்த படத்தை 2019 பிப்ரவரி 23ம் தேதி பாகிஸ்தான் ஊடகங்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. அதில், உள்ளூர் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஏழு பேர் கைது என்று குறிப்பிட்டிருந்தனர்.
லீட் பாகிஸ்தான் என்ற இதழ் வெளியிட்டிருந்த பதிவிலிருந்து இந்த படம் எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. அதில், அச்சு அசலாக இந்த படம் இருந்தது நம்முடைய ஆய்வில் தெரியவந்தது.
அடுத்ததாக, கைத் துப்பாக்கி, தோட்டா, கையில் மாட்டித் தாக்கும் ஆயுதம் இருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அதுவும் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட படம் என்று தெரிந்தது. டான் இதழ் இந்த படத்தை 2017 மே 22ம் தேதி வெளியிட்டிருந்தது தெரிந்தது.
Search Link | |
dawn.com | Archived Link 1 |
tnn.com.pk | Archived Link 2 |
அதே தேதியில் டிஎன்என் என்ற பாகிஸ்தான் ஊடகத்திலும் இந்த படம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. டானை விட இதில் இந்த படம் மிகவும் தெளிவாக இருந்தது.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்திலும் இந்த படம் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருந்தது தெரிந்தது. அதிலும் கூட இந்த தகவல் தவறானது என்றே தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் ஆயுதங்கள், துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
