
அர்ச்சகர்களை வைத்து, யாகம் செய்து பெரியார் ஃபவுண்டேஷனுக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
வெள்ளை வேட்டி மற்றும் கருப்பு நிற சட்டை அணிந்த பலர் யாக சாலையில் அமர்ந்துள்ளனர். ஒருவர் மட்டும் காவி வேட்டி அணிந்துள்ளார். சில பெண்களும் கருப்பு புடவையில் உள்ளனர். படம் தெளிவின்றி உள்ளது. இதனால், படத்தில் உள்ளவர்கள் யார் என்று சரியாகத் தெரியவில்லை. யாக சாலை போல உள்ளது.
நிலைத் தகவலில், “பெரியார் ஃபவுன்டேஷன் பூமி பூஜை” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Ekambaram Natarajan என்பவர் 2019 செப்டம்பர் 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படம் தெளிவின்றி உள்ளது. ஒரு கட்டிடத்துக்குள் நடந்த யாகம் போல உள்ளது. பூமி பூஜை என்றால், கட்டிடம் கட்டும் இடத்தில் செய்யப்படும். ஆனால், கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறும் இடம் போல அது இல்லை. மண்டபத்துக்குள் அமர்ந்து யாகம் செய்யப்படுவது போல் உள்ளது.
கருப்புச் சட்டை அணிந்த பலரும் பய பக்தியாக உள்ளனர். திராவிடர் கழகத்தினர் கடவுள் மறுப்பாளர்கள், எந்த கடவுளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள், அவர்கள் இப்படி பயபக்தியாக பூஜை செய்வார்களா, அதுவும் பெரியார் ஃபவுண்டேஷன் பூமி பூஜையை பகிரங்கமாக செய்வார்களா என்றால் அது நம்பும் படி இல்லை. மேலும், கருப்புச் சட்டையைத் தவிர வேறு எதுவும் திராவிடர் கழத்துடன் தொடர்புபடுத்தும் வகையில் இல்லை. அதிலும் ஒருவர் காவி வேஷ்டி அணிந்து உள்ளார். இது எந்த ஊரில் நடந்த பூமி பூஜைக்கான விழா என்று குறிப்பிடவில்லை. எனவே, வழக்கமாக பரவும் வதந்தியாக இருக்கலாம் என்று தெரிந்தது. இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் பற்றிய தகவல் நமக்குக் கிடைத்தது.
Search Link |
யுடர்ன் என்ற இணையதளம் கூட பெரியார் ஃபவுன்டேஷன் அமைக்க பூமி பூஜை என்ற பெயரில் பரவும் தகவல் தவறானது என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. ஆனால், எங்கிருந்து இந்த படம் கிடைத்தது, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோதும், ஜாமீனில் வெளிவந்த பிறகு, வழக்கிலிருந்து விடுதலை பெற வேண்டியும் அ.தி.மு.க-வினர் கருப்புச் சட்டை அணிந்து தொடர்ந்து யாகங்கள், பூஜைகள் செய்து வந்தனர். அந்த வகையில் திருப்பூரில் உள்ள நவ கிரக கோவிலில் நடந்த பூஜை என்று குறிப்பிட்டு இருந்தனர்.
youturn.in | Archived Link |
படத்தில் இருப்பது அ.தி.மு.க-வினர்தான் என்பதை உறுதிப்படுத்த வேறு ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க தொடர்பான செய்திகளை வெளியிடும் நமது அம்மா என்ற இணையதளம் பற்றி நமக்கு தகவல் கிடைத்தது. அதில் சென்று, 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏதாவது செய்தி கிடைக்கிறதா என்று தேடினோம். ஜெயலலிதா செப்டம்பர் இறுதியில்தான் சிறை சென்றார்… அதன் பிறகு அக்டோபர் முதல் வாரத்தில்தான் வழிபாட்டில் அ.தி.மு.க-வினர் இறங்கினர். இதனால், அக்டோபர் மாதம் நம்முடைய தேடலைத் தொடங்கினோம்.
நமது அம்மா இணையதளம் 2014ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்தது. அந்த செய்தியில் வெளியிடப்பட்டு இருந்த புகைப்படம் மிகவும் தெளிவாக இருந்தது. படத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயராக இருந்த விசாலாட்சி இருப்பது தெளிவாக தெரிந்தது.
namadhuammatv.blogspot.com | Archived Link |
செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், “திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டிபிச்சம்பாளையம் விநாயகர் கோட்டை மாரியம்மன், கன்னீமார், முருகன்-விநாயகர், கருப்பராயன் மற்றும் நவக்கிரக கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி கணபதி ஹோமம் பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்” என்று குறிப்பிட்டு இருந்தது.
தொடர்ந்து தேடியபோது 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பூர் மேயர், துணை மேயர் தலைமையில் திருப்பூர் பகுதியில் உள்ள பல கோவில்களில் ஜெயலலிதா விடுதலை பெற சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ட புகைப்படங்கள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம், படத்தில் இருப்பவர்கள் அ.தி.மு.க-வினர் என்பது உறுதியானது.
namadhuammatv.blogspot.com | Archived Link |
நம்முடைய ஆய்வில், படத்தில் இருப்பது திருப்பூர் மேயராக இருந்த விசாலாட்சி தலைமையில் நடந்த யாகத்தின்போது எடுத்த புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
படத்தில் உள்ளவர்கள், திராவிடர் கழகத்தினர் இல்லை அ.தி.மு.க-வினர்தான் என்பதும், அது பெரியார் ஃபவுண்டேஷன் பூமி பூஜையின்போது எடுக்கப்பட்ட படம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா விடுதலை பெற அ.தி.மு.க-வினர் நடத்திய யாகத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து, பெரியார் ஃபவுண்டேஷன் பூமி பூஜை என்று தவறான தகவலை பரப்பியது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அர்ச்சகர்களை வைத்து பெரியார் ஃபவுண்டேஷன் பூமி பூஜையா?
Fact Check By: Chendur PandianResult: False
