
எகிப்து பிரமிடு ஒன்றுக்கு அடியில் இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
எகிப்து பிரமிடுக்கு அருகில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகழ்வாராய்ச்சியின் போது எகிப்தின் பிரமிடுகளுக்கு அடியில் ஒரு பழமையான இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரமிட்டின் கீழ் ஒரு இந்து சூரியக் கோயில் இருப்பதைக் காணலாம். மேலும் கோவில்களின் மேல் பிரமிடுகள் கட்டப்பட்டுள்ளன.
பிரமிட்டின் கீழ் இந்து கோவில்களின் பல கதவுகள் உள்ளன, மேலும் பல சிவலிங்கங்களும் உள்ளன. எல்லாமே பிரமிடுகளால் மூடப்பட்டுள்ளது….. பல சிவலிங்கங்கள் பூமிக்கடியில் இருப்பதால், பல இந்து கோவில்கள் இன்னும் பூமிக்கடியில் உள்ளன.
4000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எகிப்தின் பிரமிடுகளின் கீழ் இந்து கோவில்களையும் நீங்கள் காணலாம். நீங்கள் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்வீர்கள் 🙏🚩 மொத்த உலகமே சனாதனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை ஹிந்துராஷ்டிரம் ஹிந்துராஷ்டிரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஏப்ரல் 6ம் தேதி பதிவிட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சூரியனை இந்து மதம் மட்டுமின்றி உலகின் பல தொன்மையான நாகரீகங்களைச் சார்ந்த மக்களும் வழிபட்டு வந்துள்ளனர். அதனால் சூரியன் ஓவியம், சிற்பம் இருந்தாலே அது குறிப்பிட்ட ஒரு மதத்தின் கோவில் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
எகிப்தின் கிசா பிரமிடுக்கு அருகே அகழாய்வு செய்யப்பட்டுள்ள படத்தைப் பகிர்ந்து, அங்கு இந்து கோவிலிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் ஏராளமான இந்து கோவில்கள் அங்கு மண்ணில் புதைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுக்க ஒரு காலத்தில் இந்து மதம்தான் பின்பற்றப்பட்டு வந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2014ம் ஆண்டில் இந்த புகைப்படத்துடன் பல ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. அந்த செய்தியைப் பார்த்தோம். அதில், “எகிப்தின் பெரிய பிரமிடு எனப்படும் கிசா பிரமிடுக்கு 1000 அடி (300 மீட்டர்) தொலைவில் அமைந்துள்ள எகிப்து மதகுருவின் கல்லறையில் ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வயது 4300 ஆண்டுக்கு முற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: livescience.com I Archive 1 I foxnews.com I Archive 2
அந்த கட்டுரையில் அது சூரிய கோவில் என்று எல்லாம் குறிப்பிடப்படவில்லை. தலைமை மதகுருவின் கல்லறை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டிடத்திலும் பெர்செனெப் என்ற மதகுருவின் கல்லறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நைல் நதியில் பெர்செனெப் மற்றும் அவரது மனைவி, நாய் ஆகியோர் பயணம் மேற்கொள்வது போன்று ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு சில ஊடகங்களிலும் இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது.
எகிப்தின் கிசா பிரமிடுக்கு அருகே இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ, சூரியன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. கிசா பிரமிடுக்கு அருகே எகிப்தின் பழங்கால மதகுருவின் கல்லறையில் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டுமே செய்தி கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் எகிப்தில் 4300 ஆண்டுகள் பழமையான இந்து மத கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
எகிப்தின் பண்டைய மத குருவின் கல்லறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை மாற்றி, இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:எகிப்து பிரமிடு அடியில் இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
