
இஸ்லாமியப் பெண்கள் இந்துக்களைத் திருமணம் செய்து மதம் மாறுவோம் என்று மும்பையைச் சேர்ந்த பாத்திமா குரோஷி என்பவர் கூறினார் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமியப் பெண்மணி ஒருவரின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இஸ்லாமிய பெண்கள் இந்துக்களை திருமணம் செய்து மதம் மாறுவோம்! மும்பை பாத்திமா குரோஷி!”, “இஸ்லாமியர்கள் பெண்களை பிள்ளை உருவாக்கும் இயந்திரமாக பாவித்து கொடுமை. எனவே, இஸ்லாமிய பெண்கள் இந்துக்களை திருமணம் செய்து மதம் மாறுவோம். அடிமைத்தனம், தலாக், படுதா மற்றும் காம இயந்திரமாக வாழ்வதில் விடுதலை பெறுவோம் – பாத்திமா குரோஸி, மும்பை” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டிருந்தது.
இந்த புகைப்பட பதிவை MuthuRama Lingam Thevar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
யார் இந்த பாத்திமா குரோஷி என்று தெரியவில்லை. இஸ்லாமிய அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போராளி என்றால் எதற்காக அவர் தலை முடியை மூடியிருக்கிறார் என்ற கேள்வி எழவே, இந்த புகைப்பட பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி யார் என்று அறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயின் ஆசிரியர் மரியம் காலிக் (Mariam Khalique) என்று தெரிந்தது. பெண் கல்வி தொடர்பாக அவர் பேசிய செய்தியை யுனெஸ்கோ (UNESCO) அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் 2013ம் ஆண்டில் பதிவிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது.
அந்த செய்தியை பார்த்தோம். தொடக்கத்திலேயே அல்லாவின் பெயரால் இங்கு வந்திருப்பதாக அவர் கூறினார் என்று பதிவிட்டிருந்தனர். இப்படிப்பட்டவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூற வாய்ப்பு இல்லை. அந்த செய்தியில் எங்கும் இஸ்லாத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் கூறவில்லை. மேலும் அந்த செய்தியில் இருந்துதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எடுத்துள்ளனர் என்பதும் தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: world-education-blog.org I Archive
சரி, மும்பையில் யாராவது இஸ்லாமிய எதிர்ப்பாளர் பாத்திமா குரோஷி என்ற பெயரில் உள்ளார்களாக, அவர் இப்படி ஏதும் கருத்தைத் தெரிவித்துள்ளாரா என்று தேடினோம். மும்பையில் இந்த பெயரில் பலர் இருப்பது சமூக ஊடகங்களில் தெரிய வந்தது. ஆனால், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பாத்திமா குரோஷி என்று எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் மூலம் பிரபலமான மலாலாவின் ஆசிரியரின் புகைப்படத்தை எடுத்து தவறான தகவலைப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாகிஸ்தானின் நோபல் பரிசு வென்ற மலாலா யூசுபின் ஆசிரியர் மரியத்தின் படத்தை வைத்து இஸ்லாமுக்கு எதிரான வெறுப்பை விஷமத்தனமாக பரப்பியுள்ளனர் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மலாலா யூசுபின் ஆசிரியர் படத்தை வைத்து மத வெறுப்பு வதந்தி பரப்பும் விஷமிகள்!
Fact Check By: Chendur PandianResult: False
