மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீதியில் தூங்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடு இழந்து தெருவில் உறங்கும் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
மைதானத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் தூங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மொரோக்கோ பூமி அதிர்வினால் வீடு வாசல் சொத்து செல்வம் என்று அனைத்தையும் இழந்து வெரும் கையுடன் தெருவில் உறங்கும் மொரோக்கோ மக்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை Md Hashim என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 16ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலரும் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் வீடுகளை இழந்த மக்கள் சாலையில் தூங்கினர் என்று பலரும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் போது குடும்பத்தோடு தூங்குவது போல இல்லை. இளைஞர்களும், இளம் பெண்களும் தூங்குவதைக் காண முடிகிறது. மைதானத்தில் அரங்குகளைப் பார்க்கும் போது ஏதோ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் போல தெரிகிறது. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஆகஸ்ட் 6ம் தேதி இந்த விடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதாவது மொரோக்கோ நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது.
அதில் ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது லிஸ்பனில் நடந்த உலக இளையோர் தின மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நடத்தும் மாநாடு அது என்பது தெரியவந்தது.
2023 ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டின் லிஸ்பன் நகரில் நடந்த இளையோர் மாநாட்டில் பங்கேற்றவர்களின் வீடியோவை எடுத்து மொரோக்கோ நாட்டில் வீடிழந்து தெருக்களில் தூங்கும் மக்கள் என்று தவறாக வதந்தி பரப்பப்பட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2023 ஆகஸ்ட் மாதம் நடந்த உலக இளையோர் தின மாநாட்டில் பங்கேற்றவர்களின் வீடியோவை, மொரோக்கோ நிலநடுக்க காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீதியில் தூங்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False