
தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தி.மு.க அரசுக் குப்பை லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
விநாயகர் சிலைகள் குப்பை லாரியில் ஏற்றப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நெஞ்சு துடிக்குது. அடேய் ஹிந்துக்களே நீங்கள் வழிபடும் விநாயகர் சிலைகள் குப்பைகளுக்கு சமமாக …குப்பை லாரிகளில்…. பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் ஏற்றிச் சென்ற அவலம்… திமுகவுக்கு ஓட்டுப் போட்ட நல்லவர்களுக்கு எட்டப்பன்களுக்கும், ஹிந்து பெயரில் ஒளிந்திருக்கும் துரோகிகளுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தேசமே தெய்வம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 8ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஆந்திரப் பிரதேசத்தில் விநாயகர் சிலைகள் குப்பை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகி இருந்தது. திடீரென்று ஆந்திரப் பிரதேசத்தில் இல்லை, தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியில் நடந்தது என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொந்தளித்து பதிவிட்டு வருகின்றனர். இது ஆந்திராவில் நடந்ததா, தமிழ்நாட்டில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது ஆந்திரப் பிரதேசத்தில் நடந்தது என்று பல செய்திகள் வெளியாகி இருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: newstm.in I Archive 1 I telugurajyam.com I Archive 2
“ஆந்திர மாநிலம் குண்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் தாங்கள் தயார் செய்த விநாயகர் சிலைகளை குண்டூர் நகரிலுள்ள சாலை ஓரத்தில் விற்பனைக்காக வைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் இங்கு விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி கிடையாது என்று கூறி அவற்றைக் குப்பை லாரியில் ஏற்றிச் சென்றனர். இதனால் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்திருந்தவர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது” என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இருந்த புகைப்படத்துடன் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
அசல் பதிவைக் காண: Twitter I Archive
தொடர்ந்து தேடிய போது தந்தி டி.வி-யில் குப்பை லாரியில் விநாயகர் சிலைகள் ஏற்றப்படும் வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருந்தனர். ஊடகவியலாளர் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். நகராட்சி ஊழியர்கள், விற்பனையாளர்கள் தெலுங்கு மொழியில் பேசிக்கொள்வதை தெளிவாகக் கேட்க முடிந்தது.
தொடர்ந்து தேடிய போது குப்பை லாரியில் விநாயகர் சிலைகளை ஏற்றிக்கொண்டு சென்ற விவகாரத்தில் குண்டூர் நகராட்சி ஆணையர் பணி நீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு செய்திகள் நமக்கு கிடைத்தன. இவை எல்லாம் சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்தது என்பதை தெளிவுபடுத்தின.
அசல் பதிவைக் காண: timesofindia I Archive 1 I newindianexpress.com I Archive 2
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் குப்பை லாரிகளில் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது என்று பகிரப்படும் புகைப்படம் ஆந்திராவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் குப்பை லாரியில் விநாயகர் சிலை ஏற்றி கொண்டு செல்லப்பட்டது என்று பகிரப்படும் படம் ஆந்திராவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் எடுத்துச் சென்றதா தி.மு.க அரசு?
Fact Check By: Chendur PandianResult: False
