
இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் துணிச்சலோடு மீட்டுவந்த இஸ்லாமிய பெண் பைலட் பாத்திமா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
ஃபேஸ்புக்கில் வேறு ஒருவர் ஷேர் செய்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில் பெண் விமானி ஒருவரின் படம் உள்ளது. அதற்கு மேல், “இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் துணிச்சலோடு மீட்டுக்கொண்டு வந்த இஸ்லாமிய பெண் பைலட் பாத்திமா. மாஷா அல்லாஹ். நீங்கள் உண்மையான முஸ்லிம் என்றால் இதை ஷேர் செய்யவும்” என்று டைப் செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவை Fayaz Ahamed என்பவர் 2020 மார்ச் 28 அன்று ஷேர் செய்துள்ளார். நிலைத் தகவலில், “இஸ்லாமிய வீரமங்கை பெண் பைலட் ஃபாத்திமா தன் உயிரை பணயம் வைத்து இத்தாலியில் தவித்த 240 இந்தியர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தார் இஸ்லாமிய வீரமங்கைக்கு ராயல் சல்யூட்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா மனித குலத்தின் ஒரே பொது எதிரியாக உள்ளது. உலக வல்லரசு நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலும் மதத்தைப் பார்ப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.
ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி இந்துவா, இஸ்லாமியரா என்று எல்லாம் எந்த செய்தியும் வெளியாகாத நிலையில், அவர் இஸ்லாமியர் என்றும் அவரது பாத்திமா என்றும் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அவரது பெயர் பாத்திமாவா என்று ஆய்வு செய்தோம்.

Search Link | economictimes.indiatimes.com | Archived Link |
இது தொடர்பாக, இத்தாலி, ஏர் இந்தியா, பெண் விமானி ஆகிய கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடினோம்.
அப்போது, கேப்டன் ஸ்வாதி ராவல், இத்தாலியிலிருந்து 263 பயணிகளை மீட்ட தாய் என்று பல செய்திகள் வெளியாகி இருப்பது தெரிந்தது. அந்த செய்திகளை திறந்து பார்த்தபோது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் இருந்தது.

indiatoday.in | Archived Link 1 |
இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் மீட்பு விமானத்தை இயக்கிய முதல் இந்திய பெண் விமானி கேப்டன் ஸ்வாதி ராவல்… ஏர் இந்தியா ஹீரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதிலும் கூட நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றிருந்த படம் இருந்தது.
Archived Link |
இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் ட்வீட் பதிவும் இடம் பெற்றிருந்தது. அதிலும் கேப்டன் ஸ்வாதி ராவல் மற்றும் கேப்டன் ராஜா சவுகான் ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் மூலம் 263 இந்தியர்களை இத்தாலியின் ரோம் நகரிலிருந்து மீட்டு அழைத்து வந்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஸ்வாதி ராவல் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று நாம் ஆய்வுக்குள் இறங்கவில்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போல் அவர் பெயர் பாத்திமா இல்லை என்பதை உறுதி செய்கிறோம்.
நம்முடைய ஆய்வில்,
படத்தில் இருப்பவர் பெயர் ஃபாத்திமா இல்லை, ஸ்வாதி ராவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
படத்தில் இருப்பவர் ஸ்வாதி ராவல் என்று சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட ட்வீட் பதிவு நமக்கு கிடைத்துள்ளது.
ஸ்வாதி ராவலுக்கு மோடி வாழ்த்து தெரிவித்த செய்தி கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இத்தாலியிலிருந்து 263 இந்தியர்களை மீட்ட ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் பெயர் பாத்திமா இல்லை, ஸ்வாதி ராவல் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இத்தாலியில் தவித்த இந்தியர்களை மீட்ட ஏர் இந்தியா விமானி பாத்திமா?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
