
மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் கட்டண சலுகை வழங்கும் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
குமுதம் வெளியிட்ட நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண கட்டண சலுகை. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதம் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Kumudam – குமுதம் ஃபேஸ்புக் பக்கம் இந்த பதிவை 2022 ஜூன் 15ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ரயில் டிக்கெட் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுவந்தன. ஆனால், சில வருடங்களாக அந்த சலுகை நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1500 கோடிக்கு மேல் லாபம் கிடைப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருகிறது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
நெட்டிசன்கள் சிலர் குமுதம் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். இந்திய ரயில்வே இப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத சூழலில், குமுதம் பெயரில் போலியாக யாராவது பகிர்ந்திருக்கலாம் என்று கருதி இது தொடர்பாக ஆய்வு செய்தோம். குமுதம் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, ஜூன் 16ம் தேதி “ஜூலை 1 முதல் முதியோர்களுக்கு மீண்டும் ரயிலில் கட்டண சலுகை எனப் பரவும் தகவல்கள் பொய்யானவை – மத்திய அரசு” என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தனர்.
தொடர்ந்து ஜூன் 15ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, “மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண கட்டண சலுகை” எனக் குமுதம் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பது தெரிந்தது. சமூக ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில் அது உண்மை என்று கருதி குமுதம் முதலில் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருக்கலாம். மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் புதிய நியூஸ் கார்டை வெளியிட்ட குமுதம், பழைய நியூஸ் கார்டை அகற்றத் தவறிவிட்டது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை எதையும் ரயில்வே அறிவிக்கவில்லை என்று மத்திய அரசு தரப்பில் வெளியான தகவலைத் தேடினோம். அப்போது, பிஐபி எனப்படும் மத்திய அரசின் செய்தி பிரிவு இது தொடர்பாக ட்வீட் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், ஊடகங்களில் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்குக் கட்டண சலுகை வழங்கப்பட உள்ளதாகப் போலியான செய்தி பரவி வருகிறது. இது போன்ற எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை. இந்திய ரயில்வே தற்போது மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்கி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தது.
மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது என்று குமுதம் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
கட்டண சலுகை என்று பரவும் தகவல் தவறானது, அது பொய் செய்தி என்று குமுதம் மீண்டும் ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளது.
முந்தை செய்தி பொய்யானது, தவறானது என்று குறிப்பிட்டுவிட்டு, தவறை சரி செய்யாமல் குமுதம் விட்டுள்ளது. இதனால் ரயில்வே கட்டண சலுகை வழங்குகிறதா இல்லையா என்ற குழப்பமே மிஞ்சியது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
முதியவர்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கும் திட்டம் மீண்டும் வருகிற ஜூலை 1, 2022 முதல் தொடங்குகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மீண்டும் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகை அமலுக்கு வருகிறதா?
Fact Check By: Chendur PandianResult: False
