கான்பூரில் முஸ்லீம்கள் போராட்டம் தொடங்கும் முன்பாக பா.ஜ.க.,வினரிடம் பேசிய போலீஸ் அதிகாரியின் வீடியோவா இது?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, இஸ்லாமியர்கள் கலவரத்தில் ஈடுபடலாம், வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று பா.ஜ.க-வினர் போலீசாரிடம் கூறினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காவல் துறை அதிகாரி இந்தியில் ஏதோ பேசுகிறார். நிலைத் தகவலில், “#கான்பூர்_போராட்டத்தில்_வெடிகுண்டு போலீஸாரிடம்_பாஜக_உரையாடல். உபி. அலகாபாத் மாவட்டம் கான்பூர் பிராக்யராஜ் பகுதியில், நபிகளார் அவமதிப்பு பிரச்சாரம் செய்த, பாஜக தலைவர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. போராட்டம் .நடக்கும் முன்னரே..! பாஜகவினர், வெடிகுண்டுகளை.வைத்து பிரச்சனை ஏற்படுத்தலாம், என்பது, போன்று போலீஸாரிடம்.. பாஜகவினரிடம் பேசும், உரையாடல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை A Sadhakathulla என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒரு இடத்தில் கும்பலாக கூட்டம் இருப்பதைக் காட்டுகின்றனர். காவல் துறை அதிகாரி ஒருவர் தன் செல்போனில் பேசுகிறார். இந்தியில் இருப்பதால் என்ன பேசுகிறார் என்பது சரியாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், முகமது நபி பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் தவறாக பேசியதைக் கண்டித்து கான்பூரில் இஸ்லாமியர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, பா.ஜ.க-வினர் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்கள் என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2021ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களைக் கண்டித்து நடந்த போராட்டம் அல்ல என்பது உறுதியானது.

இந்த வீடியோவுடன் கூடிய செய்திகளை என்.டி.டி.வி இந்தியில் வெளியிட்டிருந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது கூடுதலாக சில தகவல் கிடைத்தன. அதில், “2021ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது, பா.ஜ.க-வினர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் தன்னை அடித்துவிட்டார்கள் என்று மாவட்ட போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் உயர் அதிகாரி ஒருவரிடம் புகார் தெரிவிக்கிறார். மேலும், பா.ஜ.க தொண்டர்கள் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்று உயர் அதிகாரியிடம் அவர் தெரிவிக்கின்றார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.in I Archive 1 I theprint.in I Archive 2

பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகம் என்று குறிப்பிட்டு சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த வீடியோவை 2021ம் ஆண்டு ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் போலீசார் மீது பா.ஜ.க-வினர் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து தாக்கினர் என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive

உத்தரப்பிரதேசத்தில் 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, பா.ஜ.க-வினர் தங்களை தாக்கினர் என கூடுதல் எஸ்.பி ஒருவர் புகார் கூறிய வீடியோவை எடுத்து, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்த பா.ஜ.க-வுடன் சேர்த்து போலீஸ் திட்டம் தீட்டியது போன்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கான்பூரில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பு பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசி உத்தரவை பெற்ற போலீசார் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கான்பூரில் முஸ்லீம்கள் போராட்டம் தொடங்கும் முன்பாக பா.ஜ.க.,வினரிடம் பேசிய போலீஸ் அதிகாரியின் வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply