நடிகர் கருணாஸ் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் மாரடைப்பால் காலமானார் என்று ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் கருணாஸ் மறைந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சற்றுமுன் மாரடைப்பால் முன்னால் MLA கருணாஸ் காலமானார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை A K Pandiyan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 31ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை தடை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்திருந்தது. இதை நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வரவேற்றிருந்தார். இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஏப்ரல் 1, 2022 அன்று அவர் பேட்டியும் அளித்திருந்தார். இந்த சூழலில் மாரடைப்பு காரணமாக கருணாஸ் மரணம் அடைந்துவிட்டார் என்று மார்ச் 31, 2022 அன்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது. 

இந்த வதந்தியைப் பரப்புகிறவர்கள் யார் என்று பார்க்கும் போது பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவை வெளியிட்ட நபர் தன்னுடைய ப்ரொஃபைல் படமாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் படத்தை வைத்துள்ளார். 

Maveeran Manigandan என்று ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் தான் பா.ம.க-வில் வேலை பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்படி இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வரும் அனைவரும் குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருப்பதைக் காண முடிந்தது. இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்றார் என்பதற்காகவே வன்மத்துடன் இதை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதைக் காண அறிய முடிகிறது.

சினிமாவில் உள்ள மூத்த பத்திரிகையாளர்களிடம் கருணாஸ் பற்றி விசாரித்தோம். அவர்கள், கருணாஸ் நலமுடன் உள்ளார். தற்போது உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். ஆதார் என்ற படத்தை அவர் எடுத்து வருகிறார். அந்த படத்தின் ஆடியோ ரிலீசுக்கு இன்று காலை (ஏப்ரல் 1, 2022) எங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடகங்களில் விஷமத்தனமாக யாரோ வதந்தி பரப்பியுள்ளனர். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் கூட அது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்குமே” என்றனர்.

இதன் மூலம் நடிகர் கருணாஸ் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்று பகிரப்படும் பதிவு போலியானது. விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நடிகர் கருணாஸ் மரணம் அடைந்துவிட்டார் என்று பகிரப்படும் பதிவு விஷமத்தனமானது தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நடிகர் கருணாஸ் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False