வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி. வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று இருந்தது.

இந்த பதிவை மூர்த்தி சீதாராமன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடியிருப்புக்காக வீட்டை வாடகைக்கு விடும் போது அதற்குக் குறிப்பிட்ட அளவு வரை ஜிஎஸ்டி கிடையாது. ஆண்டு வாடகை 20 லட்சத்துக்கு அதிகமாகச் செல்லும் போது அதற்கு ஜிஎஸ்டி உண்டு. வர்த்தக ரீதியில் வாடகைக்கு விடும் போது அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்று ஜிஎஸ்டி சட்டம் கூறுகிறது. ஆனால் அதற்கு என்று சில வரம்புகளை அரசு நிர்ணயித்துள்ளது.

இந்த சூழலில் வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார் என்று பகிரப்படும் தகவல் ஆச்சரியத்தை அளித்தது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். நிர்மலா சீதாராமன் இப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டாரா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். எந்த ஒரு ஊடகத்திலும் இப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை என்று தெரிந்தது.

அடுத்ததாக, தந்தி டிவி இப்படி ஏதும் நியூஸ் கார்டு வெளியிட்டதா என்று பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்று ஒரு நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால் அதில், “கடந்த மாதம் அதிகளவில் ஜிஎஸ்டி வசூல். இதுவரை இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் ரூ.1.42 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து, தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ளத் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இதை நீங்கள்தான் வெளியிட்டீர்களா என்று கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்றார். மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு தங்கள் சமூக ஊடக பக்கங்களில் அவர்கள் பதிவும் வெளியிட்டனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வீடு, கடை வாடகைக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False