முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்து அசந்து போனோம் என்று அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
எஃப்.பி.ஐ தலைவர் என்று ஒருவர் புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “முஸ்லிம்களை ரகசியமாய் ஆய்வு செய்தோம் பிறகு அசந்து நின்றோம் FBI” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “உளவு’ பார்க்கச் சென்றோம்…! முழு ‘நிலவு’ பார்த்து நின்றோம்…! [அமெரிக்காவின் 03.03 மில்லியன் சனத்தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை சுமார் பதினைந்து வருடங்கள்,
பதினைந்தாயிரம் உளவாளிகள் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிவாயில்கள், குர்ஆனிய வகுப்புகள், வழிபாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் ரகசிய ஒலிப்பதிவுகள், மற்றும் கண்காணிப்புகள், உலக அளவில் உள்ள 7485 முஸ்லிம் பிரபலங்களின் மின்னஞ்சல்கள் என தேடித்துருவி உளவுபார்த்து, எஃ.பி.ஐ. இன் பணிப்பாளர் ‘ஜேம்ஸ் பி கொமி’யும் அதன் முன்னாள் அதிகாரி ‘கேசி ஹன்னா’வும் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் சாராம்சம் இது!]” என்று தொடங்கி நீண்ட பதிவை வெளியிட்டிருந்தனர். அதனுடன் ஒரு செய்திக் கட்டுரையின் இணைப்பையும் அளித்திருந்தனர். இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களை 2001ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை எஃப்.பி.ஐ ரகசியமாக கண்காணித்து ஆய்வு செய்ததாகவும், அதன் அடிப்படையில் எஃப்.பி.ஐ அறிக்கை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அது தொடர்பாக ஒரு கட்டுரை இணைப்பையும் அளித்திருந்தனர். அந்த இணைப்பைப் பார்த்தோம்.
அது அமெரிக்காவில் வெளியாகும் The Onion என்ற இணையதளத்தின் கட்டுரையாகும். ஆனியன் அதாவது வெங்காயம் என்று பத்திரிக்கையின் பெயரைப் பார்க்கும் போதே இது உண்மையான ஊடகம்தானா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, தி ஆனியன் பத்திரிகை பற்றி தேடிப் பார்த்தோம். அது பொய் செய்திகளை நையாண்டி என்ற பெயரில் வெளியிடும் ஊடகம் என்று தெரியவந்தது.
உண்மைப் பதிவைக் காண: theonion.com I Archive
The Onion ஊடகம் பற்றிய விவரம் About us’ பகுதியில் நமக்குக் கிடைத்தது. 1756ல் தொடங்கப்பட்டது என்றும் தினமும் 4.3 ட்ரில்லியன் மக்கள் அதை படிக்கிறார்கள் என்றும் 3.5 லட்சம் முழு மற்றும் பகுதி நேரப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று மிகப்பெரிய கதையை எழுதியிருந்தார்கள். Disclaimer பகுதியில் The Onion® is a Satirical Newspaper என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது நையாண்டி செய்தித்தாள் என்று தெரிவித்திருந்தனர்.
உண்மைப் பதிவைக் காண: theonion.com I Archive
அதில் வெளியான கட்டுரைகளைப் பார்த்தோம். சமீபத்தில் காலமான போப் பிரான்சிசுக்கு குழந்தைகள் உள்ளது என்றும், புதிய போப்பை தேர்ந்தெடுப்பதை விட எறும்புகளை கவனிக்கும் வேலை உள்ளது என்று கடவுளே கூறியதாகவும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தனர்.
பொய்யான, நையாண்டி கட்டுரைகளை வெளியிடும் ஊடகத்தின் செய்தியை எடுத்து வந்து, இஸ்லாமியர்கள் பற்றி எஃப்.பி.ஐ ஆய்வு செய்தது என்று உண்மை செய்தி போல சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அமெரிக்காவின் போலி, நையாண்டி செய்திகளை உருவாக்கி வெளியிடும் ஊடகம் ஒன்று வெளியிட்ட முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்து வியந்து போன எஃப்.பி.ஐ என்ற பொய் செய்தியை உண்மை என்று நம்பி, சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்தோம் என்று அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அறிவித்ததா?
Written By: Chendur PandianResult: False
