
ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலிய யூதர்கள் அல்லல்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஜன்னல் அல்லது கதவு பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்களை காவலர்கள் பிடித்து இழுத்து வௌியேற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய ஏவுகணைகளுக்கு பயந்து இஸ்ரேலிய யூதர்கள் அல்லல்படும் காட்சிகள்..
அதிகார திமிரில் ஆணவத்தோடு ஆட்சியாளர்கள் ஆடினால் அதை கேள்வி கேட்காமல் இருந்தால் இப்படி ஒரு நிலை வேடிக்கை பார்த்த குடிமக்களுக்கு நிச்சயமாக வரும்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.;.
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இஸ்ரேலியர்கள் திணறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. காவலர்கள் போல இருந்தவர்கள் சிலரை பிடித்து வெளியே தள்ளுவது போன்று வீடியோ இருந்தது. பயந்து ஓடியது போன்று காட்சி இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது இது இஸ்ரேலைச் சார்ந்தது இல்லை, ஜார்ஜியாவைச் சார்ந்தது என்பது தெரியவந்தது. ஜார்ஜியா நாட்டில் போலீசாரைத் தாக்கிய இளைஞர் ஒருவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த இளைஞருக்கு ஆதரவாக மக்கள் நீதிமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களை காவலர்கள் வெளியேற்றியதாக பல பதிவுகள் மற்றும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.
ஜார்ஜியன் லிபர்டி ரேடியோ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பான முழு வீடியோவையும் வெளியிட்டிருந்தனர். அந்த இளைஞர் போலீசாரை தாக்கியது, அவருக்கு தண்டனை வழங்கப்படுவது, அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நடந்த போராட்டம் என அனைத்தும் இருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ இஸ்ரேலில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.
முடிவு:
ஜார்ஜியாவில் இளைஞர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை மக்கள் முற்றுகையிட்ட வீடியோவை இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பயந்து மக்கள் அல்லாடும் காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பயந்து ஓடும் இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
