பள்ளி, கல்லூரி அருகே விற்கப்படும் பொம்மை வடிவிலான போதைப் பொருள் இதுவா?

குற்றம் | Crime தமிழ்நாடு | Tamilnadu தவறாக வழிநடத்துபவை I Misleading

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பொம்மை வடிவில் போதைப் பொருள் ஒன்று விற்கப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிங்க் நிறத்தில் குட்டி டெடி பியர் வடிவிலான பொம்மை ஒரு பிளாஸ்டிக் உறையில் போடப்பட்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “உஷார்…உஷார்… புதிய போதைப்பொருள் பள்ளிகளில்… உங்களிடம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக பாசத்திற்குரிய பெற்றோர்களே இந்த போதைப்பொருளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் இது “ஸ்ட்ராபெர்ரி குயிக்” எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள் பள்ளிகளில் தற்போது மிகவும் பயங்கரமான போதை வியாபாரம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். 

ஸ்ட்ராபெர்ரி பாப் ராக்ஸ் (வாயில் சிதறி ‘வெடிக்கும்’ மிட்டாய்) போல் தோற்றமளிக்கும் ஒரு வகை கிரிஸ்டல் மெத் புழக்கத்தில் உள்ளது. இது ஸ்ட்ராபெர்ரி போலவும் வாசனை வீசுகிறது, மேலும் பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இதை ஸ்ட்ராபெர்ரி மெத் அல்லது ஸ்ட்ராபெர்ரி குயிக் என்று அழைக்கிறார்கள். குழந்தைகள் இதை மிட்டாய் என்று நினைத்து உட்கொண்டு கடுமையான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, செர்ரி, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் வருகிறது. 

தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கு அந்நியர்களிடமிருந்து மிட்டாய் வாங்க வேண்டாம் என்றும், இப்படித் தோற்றமளிக்கும் மிட்டாயை நண்பரிடமிருந்தும் (யாரிடமிருந்து பெற்றுக் கொண்டாரோ, அவரே மிட்டாய் என்று நம்பியிருக்கலாம்) வாங்க வேண்டாம் என்றும், அப்படி அவர்களிடம் இது போன்ற ஏதேனும் இருந்தால் உடனடியாக ஆசிரியர், முதல்வர் போன்றோரிடம் கொடுக்கச் சொல்லுங்கள். இந்த பதிவை உங்களால் முடிந்தவரை பலருக்கு அனுப்பவும். பொது நலன் கருதி அபூ ஆலிம் ரஷாதீ விழுப்புரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பள்ளி, கல்லூரி அருகே புதுவிதத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், எங்கு, எந்த பள்ளி, கல்லூரிக்கு அருகே விற்பனை செய்யப்படுகிறது என்று எந்த தகவலையும் அளிக்கவில்லை. பொதுவாக நல்லது செய்வதாக நினைத்து வதந்தியைப் பரப்பியிருப்பது போல் உள்ளது. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஏதேனும் அறிவிப்பை தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களை பார்த்தோம். ஆனால், போதை மருந்து விற்பனை செய்யப்படுவதாக எந்த ஒரு எச்சரிக்கை பதிவையும் தமிழ்நாடு காவல் துறை தரப்பிலிருந்து வெளியிடவில்லை. காவல் துறை அதிகாரிகளை தொடர்புகொள்வதற்கு முன்பு இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வைத் தொடர்ந்தோம்.

உண்மைப் பதிவைக் காண: georgeherald.com I Archive

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்துடன் 2017ம் ஆண்டு தென்னாப்பிரிக்க ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி கிடைத்தது. அதில், கேப் டவுனில் குறிப்பாக தெற்கு கேப்-ல் பிங்க் நிறத்தில் டெடி பியர் வடிவிலான போதை மருந்து விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் இதை இனிப்பு என்று நினைத்து சாப்பிட வாய்ப்பு உள்ளதால் பெற்றோர் கவனத்துடன் இருக்க காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாராவது இந்த புகைப்படத்தில் உள்ளது போன்ற பொருளை, இனிப்பு என்று வழங்கினால் குழந்தைகள் வாங்க வேண்டாம் என்று பெற்றோர் எச்சரிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே ஆண்டில் இதே போன்ற எச்சரிக்கையை இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை வெளியிட்டதாக இங்கிலாந்து செய்தி ஒன்றும் நமக்குக் கிடைத்தது. 

உண்மைப் பதிவைக் காண: thesun.co.uk I Archive

தொடர்ந்து தேடிய போது 2017ம் ஆண்டில் தி சன் என்ற இங்கிலாந்து ஊடகத்தில் இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியாகி இருந்தது தெரிந்தது. அதில், “13 வயதான பள்ளி மாணவிகள் டெடி பியர் வடிவிலான மாத்திரை சாப்பிட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் கூட இது ஸ்டாக் புகைப்படம் (stock picture) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 2017ம் ஆண்டிலிருந்து இந்த தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிகிறது. 

அடுத்ததாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் ஸ்ட்ராபெர்ரி குயிக் என்ற போதை மருந்த விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கூகுளில் தொடர்ந்து தேடினோம். 2010ம் ஆண்டில் மும்பையில் இந்த பெயரில் போதைப் பொருள் விற்கப்படுகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதிலும், பள்ளிக்கு அருகே இப்படி யாராவது குழந்தைகளுக்கு கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று பொதுவான அறிவுரையாக இருந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்திடமிருந்து பெற்றோருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு செய்திகளையும் ஒன்று சேர்த்து புதிய வதந்தியைப் பரப்பியிருப்பது தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: timesofindia.indiatimes.com I Archive

ஸ்டிராபெர்ரி குயிக் தொடர்பாக snopes.com இணைய ஊடகம் அமெரிக்காவின் போதை தடுப்புப் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டதாகவும், அதற்கு அவர்கள் ஸ்டிராபெர்ரி குயிக் என்ற பெயரில் போதை மருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தது. 2010ல் இருந்து இந்த வதந்தி சர்வதேச அளவில் பரவியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அருகே போதை மருந்த விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தமிழ்நாடு காவல் துறையின் கருத்தை அறிய முயற்சி செய்தோம். ( 044- 249578780) என்ற எண்ணில் தொடர்புகொண்டு கேட்டோம். எங்கே விற்பனை செய்யப்படுகிறது என்று நம்மிடம் விசாரித்தவர்களிடம் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பற்றி விளக்கினோம். “இது தொடர்பாக புகார் ஏதும் வரவில்லை, தமிழ்நாடு காவல் துறை தரப்பில் இருந்து எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை” என்றனர். 

நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படம் மற்றும் தகவல் 2010ம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிகிறது. பொதுவாக முன் பின் தெரியாதவர் கொடுக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம் என்ற விழிப்புணர்வு தேவைதான். ஆனால், போதை மருந்து என்றெல்லாம் அச்சமூட்டும் வகையில் பதிவு உள்ளது. இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் நடந்ததாக செய்தி இல்லை. எனவே, இது வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஸ்டிராபெர்ரி குயிக் என்ற போதை மருந்து பள்ளி, கல்லூரி அருகே விற்கப்படுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பள்ளி, கல்லூரி அருகே விற்கப்படும் பொம்மை வடிவிலான போதைப் பொருள் இதுவா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading