வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் எச்சரித்ததா?

அறிவியல் தமிழ்நாடு | Tamilnadu தொழில்நுட்பம்

வாகனங்களில் பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம். இப்படி செய்வதால் பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று இந்தியன் ஆயில் எச்சரிக்கை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டது போன்று எச்சரிக்கை ஒன்று ஆங்கிலத்திலிருந்தது. அதில், “வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் டேங்கை முழுவதும் நிரப்ப வேண்டாம். முழு டேங்கும் நிரம்பும்போது டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் ஐந்து வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பெட்ரோல் டேங்கை திறந்து மூடுங்கள். இதனால் அதில் உருவாக்கும் வாயு வெளியியேறிவிடும். இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை Valliamman Anbu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 8ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இதே போன்று தமிழிலும் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதை Pudukkottai Page என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஏப்ரல் 8ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோடைக் காலத்தில் பெட்ரோல் டேங்கில் வாயு உருவாகும் என்றும், அப்படி வாயு உருவாக முடியாத அளவுக்கு பெட்ரோலை நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனமே கூறியதாக பதிவு பகிரப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெயிலை எதிர்கொள்ள முடியாத அளவுக்காக வாகனங்களை தயாரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. மேலும், இந்த வாரத்தில் ஐந்து வாகனங்கள் வெடித்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இ-ஸ்கூட்டர்கள் வெடித்ததாக செய்திகள் வெளியாகின. பெட்ரோல் டேங்க் முழுமையாக நிரம்பியதால் வாகனம் வெடித்தது என்று எந்த செய்தியும் வெளியானதாக நினைவில் இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு அறிவிப்பை இந்தியன் ஆயில் வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கத்தை பார்வையிட்டோம். அதன் ட்விட்டர் பக்கத்தைத் திறந்ததும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்று உறுதியாகிவிட்டது.

2019ம் ஆண்டில் இந்த வதந்தி பரவி வந்த போது இந்தியன் ஆயில் நிறுவனம் மறுப்பு தெரிவித்துப் பதிவு வெளியிட்டிருந்தது. அதை தற்போதும் அதன் ட்விட்டர் பக்கத்தில் “பின்” செய்து வைத்திருந்தது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்துக்குள் நுழைந்தால் முதலில் அந்த பதிவை பார்த்துவிட்டு தான் சமீபத்திய பதிவுகளைப் பார்க்கும் வகையில் பின் செய்யப்பட்டிருந்தது.

அதில், “சமூக ஊடகங்களில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டதாக எச்சரிக்கை பகிரப்பட்டு வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பதால் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்ப வேண்டாம். இப்படி நிரப்புவது பெட்ரோல் டேங்கை வெடிக்க செய்துவிடும். அதிக பட்சம் நிரப்ப விரும்பினால் அரை டேங்க் அளவுக்கு நிரப்புங்கள். டேங்கில் உருவாகும் வாயுவை வெளியேற்றுங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archive

இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த வதந்தி தொடர்பான விளக்கத்தை அளிக்க விரும்புகிறது. தானியங்கி வாகனத் தயாரிப்பாளர்கள் தேவைகள், தட்ப வெப்பநிலை, பாதுகாப்பு அம்சம் எனப் பல விஷயங்களை ஆய்வு செய்துதான் வாகனத்தை வெளியிடுகின்றனர். வாகனத்தின் டேங்க்கை மட்டும் விதிவிலக்காகப் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டுத் தயாரிக்காமல் விட்டிருக்க மாட்டார்கள். எனவே, வெயிலோ, குளிரோ வாகனத்தின் முழு டேங்கையும் நிரப்புவது பாதுகாப்பானதுதான் ” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியன் ஆயில் நிறுவனமே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று தெளிவுபடுத்திவிட்டது. பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்புவதால் பெட்ரோல் டேங்க் வெடித்துவிடும் என்ற தகவல் தவறானது என்று அது உறுதி செய்துள்ளது. எனவே, இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெட்ரோல் டேங்கை முழுவதும் நிரப்பினால் டேங்க் வெடித்துவிடும் என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் எச்சரித்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False