நடிகர் விஜய்க்கு உதவத் தயார் என்று தமிழருவி மணியன் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு உதவத் தயாராக உள்ளேன் என்று தமிழருவி மணியன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று பிரபல அரசியல் பேச்சாளர் தமிழருவி மணியன் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவுவதே மனித இயல்பு! அருமைச்சகோதரர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 2ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவருக்கு உதவ தயாராக உள்ளதாக பிரபல அரசியல் பேச்சாளர் தமிழருவி மணியன் கூறியதாக நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது தினமலர் தற்போது வெளியிட்டு வரும் நியூஸ் கார்டின் வடிவமைப்பில் இல்லை. தமிழ் ஃபாண்டும் தினமலர் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive

முதலில் நடிகர் விஜய்க்குத் தமிழருவி மணியன் ஆதரவு தெரிவித்தாரா, அது தொடர்பாக அவரது பேட்டி, செய்தி ஏதும் வெளியாகி இருக்கிறதா என்று பிப்ரவரி 2, 2024ல் வெளியான செய்திகளைப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. நடிகர் விஜய் பற்றி தமிழருவி மணியன் ஏதேனும் கூறியிருக்கிறாரா என்று தேடிப் பார்த்தோம். “விஜய் அரசியல் ஆசை கொள்வதே தவறு” என்று விகடன் ஊடகத்துக்கு அவர் அளித்திருந்த பேட்டிதான் கிடைத்தது. எதிர்காலத்தில் தமிழருவி மணியன் விஜய்க்கும் ஆதரவு அளிக்கலாம் என்றாலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு பதிவிடப்பட்ட காலத்தில் அவர் ஆதரவு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது தெளிவானது.

இந்த நியூஸ் கார்டை தினமலர் வெளியிடவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள முதலில் அதன் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அதில் தமிழருவி மணியன் தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, தினமலர் ஆசிரியர் குழு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ்அப்-ல் அனுப்பி இது உண்மையா என்ற கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் அளித்த அவர், “இது போலியானது” என்றார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நடிகர் விஜய்க்கு உதவத் தயார் என்று தமிழருவி மணியன் கூறியதாக பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு உதவத் தயார் என்று தமிழருவி மணியன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நடிகர் விஜய்க்கு உதவத் தயார் என்று தமிழருவி மணியன் கூறினாரா?

Written By: Chendur Pandian 

Result: False

Leave a Reply