பிரக்ஞானந்தா நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து நியூஸ் கார்டு வெளியிட்ட சன் நியூஸ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சிகள் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “”திருட்டு திராவிடத்தின் தில்லுமுல்லு”! மாஸ்டர் செல்வன் பிரக்ஞானந்தா, கலந்துக்கொள்ளும் செஸ் போட்டியின் போதெல்லாம் எப்பொழுதுமே “திருநீற்றை” நெற்றியில் அணிந்துக்கொண்டு தான் இருப்பார்! உண்மையை உரைக்கும் “பாலிமர்”! மனதின் வக்கிரத்தை வெளிப்படுத்தும் “சன் டி.வி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

செஸ் வீரர் நெற்றியில் இருந்த திருநீற்றை சன் நியூஸ் தொலைக்காட்சி போட்டோ எடிட் முறையில் அகற்றி நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளதா என்று மட்டும் அறிய ஆய்வு செய்தோம்.

முதலில் பிரக்ஞானந்தா புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் உள்ளிட்ட இதர புகைப்படங்கள் தொடர்பான தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2023 ஆகஸ்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. என்டிடிவி, நியூஸ் 18 உள்ளிட்ட பல ஊடகங்களும் இந்த புகைப்படத்தை அப்போது வெளியிட்டிருந்தன. ஆனால், எந்த புகைப்படத்திலும் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் திருநீறு இல்லை. இதன் மூலம் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது இல்லை என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive

இதை மேலும் உறுதி செய்துகொள்ள முதலில் வெளியான பதிவைத் தேடினோம். இந்த புகைப்படத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்புக்காக (International Chess Federation (FIDE)) ஸ்டீவ் போன்ஹேஜ் (Stev Bonhage) என்ற புகைப்பட கலைஞர் எடுத்திருப்பது தெரிந்தது. ஆனால், அவருடைய சமூக ஊடக பக்கங்களிலோ, இணையதளத்திலோ இந்த புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை. அதே நேரத்தில் பல வெளிநாட்டு ஊடகங்களிலும் இந்த புகைப்படம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. உலக கோப்பை செஸ் இறுதி போட்டி தொடர்பாக தொடர்ந்து தேடிய போது பிரக்ஞானந்தாவின் வேறு சில புகைப்படங்களும் நமக்கு கிடைத்தன. அதில் கூட திருநீறு இல்லை.

உண்மைப் பதிவைக் காண: indiatvnews I Archive

சரி பிரக்ஞானந்தா திருநீறே இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது இல்லையா என்று தேடிப் பார்த்தோம். திருநீறு இல்லாமல் சில புகைப்படங்களைக் காண முடிந்தது. அது அவர் திருநீற்றை வைக்காமல் வந்தாரா, வைக்க மறந்தாரா அல்லது வைத்த பிறகு அழிந்துவிட்டதா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. நம்முடைய ஆய்வில் சன் நியூஸ் வெளியிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு விஷமத்தனமானது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் திருநீற்றை அழித்து நியூஸ் கார்டு வௌியிட்ட சன் நியூஸ் டிவி என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரக்ஞானந்தா நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply