இஸ்ரேல் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பேருந்துகள் தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்கிறது. நிலைத் தகவலில், "இஸ்ரேல் மீதான ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமீப நாட்களாக இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். அதே நேரத்தில் 2022ம் ஆண்டில் இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. இதன்மூலம் இந்த வீடியோ தற்போது நடந்து வரும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையது இல்லை என்பது தெளிவானது.


2022ம் ஆண்டு வெளியான பதிவுகளை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது வடக்கு இஸ்ரேலில் பஸ் நிறுத்தத்திலிருந்த பஸ்களில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்த சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.


உண்மைப் பதிவைக் காண: yenicaggazetesi.com.tr I Archive 1 I timesofisrael.com I Archive 2

தொடர்ந்து தேடிய போது துருக்கி மொழியில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில் "இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள சஃபேட் (Safed) நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 18 பஸ்கள் எரிந்து நாசமாகின" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் அடிப்படையில் கூகுளில் வேறு சில அடிப்படை வார்த்தைகளைப் பதிவிட்டுத் தேடினோம். அப்போது ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ 2024 இஸ்ரேல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

2022ம் ஆண்டு இஸ்ரேலில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் ஏற்பட்ட தீவிபத்து வீடியோவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram
Claim Review :   இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE