
அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் தொடர்பு இல்லை என்று சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளதாகவும் இது தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஆப்கானிஸ்தானை நாசமாக்கியது எங்கள் அயோக்கியத் தனமேயன்றி வேறில்லை.
அமெரிக்க இரட்டை வர்த்தக மைய கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் சம்பந்தமில்லை. மன்னிப்பு கோரிய அமெரிக்க உளவுத் துறை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக திஆனியன்.காம் என்ற இணைய இணைப்பைக் கொடுத்துள்ளனர்.
இந்த பதிவை Shahul Hameed 2019 ஜூன் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரண்டு கோபுரங்கள், பெண்டகன் மீது விமானங்களை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் மறைந்து வாழ்வதாக குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. கடைசியில், பாகிஸ்தானில் வாழ்ந்துவந்த பின்லேடனை 2011 மே 1ம் தேதி அமெரிக்கா மிகவும் ரகசியமாக சென்று தாக்கி கொன்றது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளதாகவும் இதற்காக பின்லேடனிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியதாகவும் திஆனியன்.காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், பின்லேடனிடம் மட்டுமல்ல… அவரது குடும்பத்தினர், அவர் பக்கம் நின்ற அவரது தோழர்கள் ஒவ்வொருவரிடமும் அமெரிக்கா மன்னிப்பு கேட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி, ஒசாமா பின்லேடனை திரும்பத் தர முடியாது… ஆனால், அவர் குடும்பத்தினர் அனுபவித்த வலி மற்றும் கஷ்டங்களுக்கு ரூ.18 மில்லியன் டாலர் இழப்பீடாக அமெரிக்கா தர உள்ளது, என்று கூறப்பட்டு இருந்தது.
பின்லேடன் குடும்பத்திடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டது உண்மையா என்று இணையத்தில் தேடினோம். ஆனால், தி ஆனியன் வெளியிட்ட செய்தியைத் தவிர வேறு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இது போலி செய்தி என்பதற்கு சில ஆதாரங்களும் கிடைத்தன.

தி ஆனியனின் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில், 1756ம் ஆண்டு இந்த செய்தித்தாள் தொடங்கப்பட்டதாகவும் தினமும், 4.3 ட்ரில்லியன் (4 லட்சத்து 30 ஆயிரம் கோடி) பேர் இந்த பத்திரிகையைப் படிப்பதாகவும், உலகம் முழுக்க 3.5 லட்சம் நேரடி, மறைமுக பத்திரிகையாளர்களுக்கு வேலைவாய்ப்பை இது வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

தி ஆனியன் மீது வழக்கு தொடர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, “தயவு செய்து அப்படி செய்துவிடாதீர்கள். அமெரிக்க முதலாவது சட்டத் திருத்தம் நையாண்டி செய்வதும் ஒரு வகையான பேச்சு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் என்று கூறியுள்ளது. தி ஆனியன் தன்னுடைய கட்டுரைகளில் பிரபலங்களின் பெயரைத் தவிர்த்து மற்ற அனைவரின் பெயரையும் நையாண்டியாக உருவாக்கித்தான் பயன்படுத்துகிறது” என்று குறிப்பிட்டிருந்தது.

தொடர்ந்து ஆனியன் பற்றித் தேடுகையில், விக்கிப்பீடியா இதை நையாண்டி இதழாகவே குறிப்பிட்டுள்ளது. இது 1988ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும் 140 பேர் இதில் வேலை செய்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
யாகூ வெளியிட்டிருந்த செய்தியில், தி ஆனியன் என்பது நையாண்டி இதழ் என்றும் ஒசாமா பின்லேடன் பற்றிய பதிவு வெறும் கற்பனையே என்றும் குறிப்பிட்டுள்ளது. கற்பனை செய்தி எப்படி யாகூ செய்திகளில் வெளியானது என்று ஆய்வு நடத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தி ஆனியன் வெளியிட்ட செய்தியை பலரும் பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வெளியாகி இருக்கிறது. இது பொய்யான தகவல் என்று www.boomlive.in உண்மை கண்டறியும் சோதனை நடத்தியதும் நமக்குக் கிடைத்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நையாண்டி இணையதளம் வெளியிட்ட பொய் செய்தியை, உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உலக வர்த்தக மைய தாக்குதலில் பின்லேடனுக்கு தொடர்பு இல்லை– சிஐஏ மன்னிப்பு கோரியதா?
Fact Check By: Praveen KumarResult: False
