
மேற்கு வங்கத்தில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரியை அழைத்துச் சென்ற ராணுவ ஆம்புலன்ஸ் வாகனத்தை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive1 I Archive 2
இஸ்லாமியர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. சாலையில் வந்த ராணுவ வாகனம் மற்றும் ராணுவ ஆம்புலன்ஸை அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். ராணுவ வாகனத்தில் உள்ளவர்கள் சொல்வதை அவர்கள் கேட்காமல் ஆளாளுக்கு சென்று மிரட்டுவதும், தாக்குதல் நடத்த தயாராவது போன்றும் வீடியோ செல்கிறது.
நிலைத் தகவலில், “என் இந்து சொந்தங்களுக்கு வணக்கம். இந்த வீடியோவில் நீங்கள் காண்பது மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜியின் ஆட்சியின் கீழ் இருக்கும் நியூ கூச்பிஹர் என்ற ஊரிலிருந்து உடல்நசரியில்லாத ஒரு ராணுவ அதிகாரியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தடுத்து நிறுத்தி இங்குள்ள முஸ்லிம்கள் செய்யும் அராஜகத்தை பாருங்கள்..😡😡😥😥
ராணுவத்திற்கு இந்த நிலை என்றால் சாதாரண இந்துக்களாகிய நாம் என்ன செய்ய முடியும் சற்று யோசனை செய்து பாருங்கள் நாம் ஒன்றுபட்டால் தான் நம்மையும் நம் குடும்பத்தாரையும் நம் ஹிந்து சமுதாயத்தையும் காப்பாற்ற முடியும் இனியாவது ஜாதி பேதம் இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் ஒற்றுமையை காட்டுவோம் நம் இந்து சமுதாயத்தை காப்பாற்றுவோம்… ஜெய் ஹிந்த்.. பாரத் மாதா கி ஜே..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஆனந்த் ராஜ் என்பவர் 2021 ஜூலை 21ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்லாமியர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதும், ராணுவ வாகனம், ராணுவ ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதும் உண்மைதான். ஆனால் அது மேற்கு வங்கத்தில் நடந்ததா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
1) ராணுவ வாகனத்தில் வங்க மொழி போன்று பதிவு எண் எழுதப்பட்டு இருந்தது.
2) ராணுவ ஆம்புலன்ஸில் பிறை சின்னம் இருந்தது. இந்திய ராணுவத்தில் பிறை சின்னத்துடன் ராணுவ ஆம்புலன்ஸ் இருப்பது இல்லை.
3) ராணுவ அதிகாரிகள் அணிந்திருந்த சட்டையில் இருந்த சின்னங்கள் இந்திய ராணுவத்தினுடையது போல இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்தது. 2021 மார்ச் 29ம் தேதி The Bangladesh Defence Analyst என்ற ஃபேஸ்புக் பக்கம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பகுதியுடன் கூடிய எட்டு நிமிட வீடியோவை வெளியிட்டிருந்தது. அதில், வங்கதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வங்கதேச ராணுவ ஆம்புலன்ஸை இடைமறித்தனர்.
இதற்கு முன்பு ராணுவத்தை அவர்கள் எதிர்கொண்டது இல்லை என்பதால் அவர்கள் குழப்பத்துடனும், பதற்றத்துடன் இருந்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள ராணுவ வாகனம் மற்றும் ராணுவ வீரர்கள் ஆடை மீது இருந்த சின்னம் வங்க தேச ராணுவத்துடன் ஒத்துப்போகிறதா என்று பார்த்தோம். வங்கதேச ராணுவத்தின் இணையதளத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்தோம். அப்போது இணையதளத்தில் அந்த சின்னம் இருந்தது. மேலும், ராணுவ அதிகாரிகள் சட்டையிலும் அதே சின்னம் இருப்பதை காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: army.mil.bd I Archive
இதன் மூலம் இந்த வீடியோ மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது. எதற்காக இஸ்லாமியர்கள் வங்கதேச ராணுவத்தின் வாகனத்தை மறித்தார்கள், என்ன பிரச்னை என்று அறிய நம்முடைய ஆய்வைத் தொடர்ந்தோம். அப்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது இந்த சம்பவம் நடந்தது என்று சில செய்திகள் நமக்குக் கிடைத்தன.
அசல் பதிவைக் காண: vikatan.com I Archive1 I dhakatribune.com I Archive 2
2021ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராடிய போது எடுக்கப்பட்ட வீடியோவை, இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற ராணுவ வீரர்களை தடுத்து நிறுத்திய இஸ்லாமியர்கள் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மேற்கு வங்கத்தில் ராணுவ ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் தடுத்தார்கள் என்று பரவும் வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மேற்கு வங்கத்தில் ராணுவ ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
