லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இஸ்ரேல் ராணுவத்தை அந்த நாட்டு மக்கள் உற்சாகமூட்டி போருக்கு அனுப்பி வைத்ததாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்ரேல் கொடிகளுடன் மக்கள் ராணுவ வீரர்களை உற்சாகமூட்டும், உணவுப் பொருட்களை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இஸ்ரேல் பொதுமக்கள், இஸ்ரேல் ராணுவத்தினருக்கு உற்சாகமூட்டி உதவிகள் செய்து போருக்கு அனுப்பும் காட்சி!

♦️♦️♦️ இந்தியாவில் உள்ள பாவாடை கள், காங்கிஸ், கம்னாட்டிஸ், திராவிட்ஸ் என அத்தனை துரோகிகளும், இஸ்ரேலியர்களின் தண்ணீரை கேட்டு வாங்கி, தினமும் ஒரு அவுன்ஸ் குடித்து வந்தால், அடுத்த பிறவியிலாவது, நல்ல ஜென்மமாக பிறக்க வாய்ப்பு உண்டு!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீர் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் தொடுத்தது. ஓராண்டாக இந்த போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸாவைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவை தாக்குகிறேன் என்று தற்போது லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

லெபனான் நாட்டுக்குள் இஸ்ரேல் தரைப்படை, டாங்குகள் நுழைய தயாராக உள்ளது என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் சூழலில், இஸ்ரேல் படை வீரர்களை அந்நாட்டு மக்கள் வாழ்த்தி அனுப்பி வைப்பதாக வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்த கிறிஸ்தவர்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சியினர் திருந்த வேண்டும் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் போர் தொடுத்தால் அதற்கு எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் திருந்த வேண்டும் என்று தெரியவில்லை. எல்லோரும் தங்கள் நாட்டுக்காக ஆதரவு தெரிவிப்பது வழக்கமான ஒன்று தான். வங்கதேச பிரிவினை போர், கார்கில் போர் என நடந்த போர்களில் எல்லாம் தமிழ்நாடுதான் அதிக அளவில் நிதியைத் திரட்டி மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதே போல் ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் வசூலிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் தேசப்பற்று தமிழர்களுக்கு என்றுமே அதிகம்தான்.

தமிழக மக்களுக்கு தேசப்பற்று இல்லை என்பது போன்று பகிரப்படும் கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை. அதேபோல், இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் ஏராளமான யூத இஸ்ரேலியர்களும் உள்ளனர். இருப்பினும் அந்த விஷயத்திற்குள் செல்லவில்லை. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.


Archive

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2023ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய சூழலில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. சில பதிவுகளில் இஸ்ரேலியர்கள் சபாத் (Shabbat) எனப்படும் தங்களின் ஓய்வு நாள் அன்று ராணுவ வீரர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: blinker.co.il I Archive

இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து, இப்போது நடந்தது போன்று தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டிருப்பது தெளிவாகிறது. 2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்!

முடிவு:

2023ம் ஆண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு இஸ்ரேலியர்கள் உணவு வழங்கிய வீடியோவை இப்போது போருக்கு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கும் இஸ்ரேலியர்கள் என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Claim Review :   இஸ்ரேல் ராணுவத்தை அந்த நாட்டு மக்கள் உற்சாகமூட்டி போருக்கு அனுப்பி வைத்ததாக பரவும் வீடியோ உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  MISLEADING